Designed by Iniyas LTD
சிறைபிடிக்கப்பட்டுள்ள படகுகளை மீட்க நடவடிக்கை!
மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த 28-7-2016-ம் நாள் புதுடெல்லியில் தமிழகம், புதுச்சேரி மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், மத்திய வேளாண்துறை மந்திரி ராதாமோகன்சிங் மற்றும் என்னையும் சந்தித்து தங்களுக்கு ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க பயிற்சி அளிப்பது மீன்பிடிக் கருவிகள் வாங்க மானியம் அளிப்பது கடலில் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நீண்டகாலத்தீர்வை ஏற்படுத்துவது ஆகியவை குறித்து விவாதித்தனர்.
மத்திய அரசின் முயற்சியால் கடந்த 2 ஆண்டுகளில் நடுகடலில் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 1,200 மீனவர்களை அந்நாட்டு அரசு விடுதலை செய்தது. தமிழக, புதுச்சேரி மீனவர்களின் 113 படகுகளை மீட்க முயற்சிகள் மேற்கொண்டுவருவதாக அப்போது மீனவ பிரதிநிதிகளிடம் தெரிவித்தோம்.
இதன் தொடர்ச்சியாக இன்று (நேற்று) வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களின் 113 படகுகளை மீட்க துரித நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.