Designed by Iniyas LTD
சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா! சிறைவளாகத்தில் போலீஸ் தடியடியால் பதட்டம்
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவுக்கு சரணடைய கால அவகாசம் தர முடியாது என்று சுப்ரீம் கோர்ட் இன்று கூறிவிட்ட நிலையில், சசிகலா போயஸ் இல்லத்திலிருந்து பெங்களூர் நீதிமன்றம் நோக்கி இன்று காலை 11.45 மணியளவில் காரில் புறப்பட்டார்.
சசிகலாவும், இளவரசியும் ஒரே காரில் பயணித்தனர். முன்னதாக சசிகலா போயஸ் இல்லத்தில் வைத்து ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பிறகு மெரினாவிலுள்ள ஜெயலலிதா நினைவிடம் சென்று அங்கும் அஞ்சலி செலுத்தினார். பிறகு ராமாவரத்தில் எம்.ஜிஆர். இல்லத்தில் சசிகலா அஞ்சலி செலுத்தினார். மாலை 4.45 மணியளவில் சசிகலா, இளவரசி ஆகியோர் பயணித்த கார் ஒசூரை தொட்டது. 5 மணியளவில் கர்நாடக எல்லைக்குள் கார் நுழைந்தது. மாலை 5.15 மணியளவில் கார் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை பகுதிக்கு வந்து சேர்ந்தது. 10 கார்கள் இவர்களது கார்களைப் பின் தொடர்ந்து வந்தன. கோர்ட்டில் நீதிபதி அஸ்வத் நாராயணன் முன்னிலையில், சசிகலா சரணடைந்தார். ஆவணங்களை பரிசீலனை செய்துவிட்டு, அவரையும், இளவரசியையும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இருவருக்கும் சிறையில் உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. உயரம், எடை, ரத்த கொதிப்பு, ரத்தத்தின் சர்க்கரை அளவு, இதய துடிப்பு உள்ளிட்ட அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் நடைபெறுகின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காகவே இன்று இங்கு சிறப்பு நீதிமன்றம் செயல்பட்டது. மதியம் 3 மணிக்கே நீதிபதி அஸ்வத் நாராயண் கோர்ட்டுக்கு வந்து சேர்ந்தார். அவர் சசிகலா மற்றும் இளவரசியை சிறையில் அடைக்க தேவையான ஆவணங்களை பார்வையிட்டு வந்தார். மாலை 5 மணியளவில் சசிகலா கணவர் நடராஜன் பரப்பன அக்ரஹாரா பகுதிக்கு வந்தார். ஃபார்ச்சூனர் காரில் அவருடன் நான்கு ஆதரவாளர்களும் வந்திருந்தனர். அதிமுக எம்.பி தம்பிதுரையும் வருகை தந்தார்.
இதற்கிடையில், சசிகலாவின் உடைகளை கொண்டு சென்ற காரின் மீது பர்ப்பன அகரஹாரா சிறை வளாகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மொத்தம் இரண்டு கார்களின் கண்ணாடிகள் உடைத்து நொறுக்கப்பட்டன.
நிலைமை மேலும் மோசம் அடையவிடாமல் கர்நாடக போலீசார் தடியடி நடத்தியதால் அங்கு பதற்றமான சூழல் உருவானது.