தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சீன தூதுவருடன் சிவிவியும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரும் சந்திப்பு

தமிழ் மக்களுக்கும் உரிமைகள், உரித்துக்கள் உள்ளது என்று ஆட்சியாளர்கள் எப்போது உணர்ந்து கொண்டு, அரசியல் ரீதியான மாற்றங்களைக் கொண்டு வருகின்றார்களோ அதன் பின்னரே இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம், புரிந்துணர்வுகள் ஏற்படும். இவ்வாறு உண்டாகும் நல்லிணக்கத்திற்கு தமிழ் மக்கள் தடையாக இல்லை என்று யாழ்.வருகை தந்த சீன நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஜி ஸியாங்லியாங்கிற்கு வடமாகாண முலதமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துரைத்துள்ளார்.  vik

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த சீன நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஜி ஸியாங்லியாங் உள்ளிட்ட அந்நாட்டு அதிகாரிகள் வடமாகாண முதலமைச்சரை அவரது வாசல்ஸ்தலத்தில் சந்தித்து உரையாடியது இச்சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இச்சந்திப்புத் தொடர்பாக முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில், என்னைச் சந்தித்த தூதுவர் புதிய அரசாங்கம் வந்ததன் பிற்பாடு சீனாவுக்கும், இலங்கைக்கும் இருந்த உறவு பாதிக்கப்பட்டு இருந்தது.

அதனை நான் வந்ததும் சீர்செய்து இப்பொழுது இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையிலே நல்லுறவை ஏற்படுத்தியுள்ளேன். இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரும் சீனாவுக்கு விஜயம் செய்திருந்தனர். இந்நிலையில் இரு நாட்டு உறவு நல்ல நிலையில் தற்போது உள்ளது என்றார். தூதுவர் தெரிவித்த விடயங்களில் இருந்து சில விடயங்களை புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. குறிப்பாக இலங்கை அரசாங்கத்தினுடன், அவர்களுடைய அனுசரணையுடனும்தான் இவருடைய யாழ்.மாவட்டத்திற்கான பயணம் அல்லது வருகை இருந்ததாக நான் காண்கின்றேன். ஏனெனில் பல விடயங்களிலே எங்களுக்குள் இருக்கும் அரசியல் ரீதியான சமூக ரீதியான முரண்பாடுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். அதனை எவ்வாறு குறைக்கலாம் என்பது தொடர்பான கேள்விகளையே தூதுவர் என்னிடம் எழுப்பியிருந்தார்.

அத்துடன் இது தொடர்பான தன்னுடைய எண்ணங்களையும் எனக்கு தெரிவித்திருந்தார். தூதுவருடைய கேள்விகளுக்கு நான் பதில் வழங்கிய போது எங்களைப் பொறுத்த வரையிலே நல்லிணக்கம் ஏற்படுவதற்கு நாங்கள் எதிர்ப்பானவர்கள் இல்லை. ஆனால் எங்களை சமமானவர்களாக நடாத்த வேண்டும். சம உரிமை உடையவர்களாக நடாத்த வேண்டும். அதற்கேற்றவாறு அரசியல் ரீதியான மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினேன். தமிழ் மக்களுக்கும், சீனர்களுக்கும் பல விதமான ஒட்டுறவுகள் இருந்துள்ளது. எங்களுடைய மொழி, மத ரீதியாகவும் பலவிதமான தொடர்புகள் இருந்து வந்தது. இப்போதும் சீன மக்களுக்கும், எங்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.

ஆனால் சீன மக்கள் எங்களுடைய தமிழ் மக்களின் தனித்துவத்தினை அறிந்து கொள்ள வேண்டும். அத்துடன் அவற்றை சிங்கள தலைவர்களுக்கும் எடுத்துக் கூற வேண்டும் என்று தூதுவரிடம் தெரிவித்ததாக முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நா.வேதநாயகனுக்கும் இலங்கைக்கான சீன தூதுவர் சந்திப்பு

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகனுக்கும் இலங்கைக்கான சீன தூதுவர், சியான்லியாங் தலைமையிலான குழுவிற்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. யாழ் மாவட்டத்தில் தற்போது நடைபெறுகின்ற மீள்குடியேற்றம் சம்பந்தமான திட்டங்கள், அபிவிருத்தி தொடர்பான திட்டங்கள் மற்றும் நல்லிணக்கம் சம்பந்தமாக நடைமுறையிலுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அரசாங்க அதிபரிடம் இச்சந்திப்பின் போது கேட்டறிந்து கொண்ட சீன தூதுவர் யாழ் மாவட்டத்திற்கு உதவ தாம் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

thu

மேலும் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் கூரேவையும் சந்தித்து கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுனர் செயலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் மத்திய அரசாங்கத்தினால் வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பில் ஆளுனர் தூதுவரிற்கு விளக்கமளித்தார்.

Comments
Loading...