Designed by Iniyas LTD
சீவிவிக்கு எதிராக தீர்ப்பு சொன்ன உயர் நீதிமன்றம்
மாகாண சபையின் பிரதம செயலாளருக்கு அரச சேவைகள் ஆணைக்குழுவினாலேயே உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் எனவும் மாகாண முதலமைச்சருக்கு உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது எனவும் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தனது அடிப்படை உரிமையை மீறியதாக குற்றம் சுமத்தி, அந்த மாகாணத்தின் பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை இன்று விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், கே. ஸ்ரீபவன், ரோஹித்த மாரசிங்க ஆகிய நீதியரசர்கள் அமர்வின் முன் இந்த மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. முதலமைச்சர் வெளியிட்ட சட்ட கோவை காரணமாக தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக பிரதம செயலாளர் குற்றம் சுமத்தியுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது.
எனினும் அந்த சட்ட கோவையை முதலமைச்சர் திரும்ப பெற்றுள்ளதன் காரணமாக அதில் உள்ளடங்கியுள்ள விடயங்களின் அடிப்படையில் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதா என்பதை தீர்மானிக்க முடியாது எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், வடக்கு மாகாண சபையின் நடவடிக்கைகளை ஒழுங்கான முறையில் முன்னெடுக்க இருதரப்பும் நல்லுறவுடன் செயற்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
முதலமைச்சர் சார்பில் ஆஜரான நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன், மாகாண அரச சேவை தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரம் மாகாண அரச சேவைகள் ஆணைக்குழுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இதனை தவிர இந்த அடிப்படை உரிமை மனுவை தொடர்ந்தும் விசாரணைக்கு எடுப்பதில்லை எனவும் உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது