Designed by Iniyas LTD
சுதந்திர தினத்தை முன்னிட்டு மானில அரசிற்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது
சுதந்திரதினம் வருகிற 15–ந் தேதி கொண்டாடப்படுகிறது. பிரதமர் நரேந்திரமோடி டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றுகிறார். இந்த ஆண்டு சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கடந்த 8–ந் தேதி கடிதம் எழுதி உள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–
சுதந்திரதின விழாவை பல்வேறு அமைப்புகள் சார்பில் சிறப்பாக கொண்டாட வேண்டும். அனைத்துப் பகுதிகளிலும் கொடி ஏற்றி கொண்டாட ஏற்பாடு செய்ய வேண்டும். குறிப்பாக கிராமங்களில் சுதந்திர தினவிழாவை கொடி ஏற்றி கொண்டாட வேண்டும். கிராமத் தலைவர்கள் தேசிய கொடியை ஏற்ற வேண்டும். அப்போது தேசிய கீதம் பாட வேண்டும்.
விளையாட்டுப் போட்டி, அணி வகுப்பு மரியாதை, கலை நிகழ்ச்சிகள், மரம் நடுதல், சமூக சேவை பணிகள், கிராமப்புற வளர்ச்சி திட்டங்களை செயல் படுத்துதல் போன்றவற்றை செய்ய வேண்டும். வட்டங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் நடைபெறும் சுதந்திரதின நிகழ்ச்சிகளில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்ய வேண்டும். வட்ட அளவில் அமைச்சர்கள், மாஜிஸ்திரேட்டுகள் கொடி ஏற்ற வேண்டும்.
முக்கிய பகுதிகளில் நடைபெறும் சுதந்திரதின கொண்டாட்டத்தில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்க ஏற்பாடு செய்ய வேண்டும். இது போல் நாடு முழுவதும் சுந்திர தினவிழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். இவ்வாறு மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லியில் பிரதமரும், மாநிலங்களில் மாநில முதல்– அமைச்சர்களும், மாவட்டங்களில் கலெக்டர்களும் வழக்கம்போல் கொடியேற்றுகிறார்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
என்றாலும் கிராமங்களிலும் சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.