Designed by Iniyas LTD
சுற்றுச்சுவர் சரிந்து விழுந்து கூலி தொழிலாளி பலி!
பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடி-மாங்காடு செல்லும் சாலையில் உள்ள செட்டி தெருவில் டாக்டர் ஞானம் என்பவருக்கு சொந்தமான பழைய கட்டிடம் இருந்தது. அந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்தார்.
இதற்காக தனியார் கட்டுமான நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டதாக கூறப்படுகிறது. அங்கு இருந்த பழைய கட்டிடம் இடிக்கப்பட்டது. புதிய கட்டிடம் கட்டுவதற்காக அந்த இடத்தில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் சுமார் 10 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டது.
தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து மண்ணை அள்ளி வெளியே எடுத்து போடும் பணியில் நாமக்கல்லை சேர்ந்த பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் நேற்று ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக பள்ளம் தோண்டப்பட்ட இடத்துக்கு அருகே உள்ள மற்றொரு கட்டிடத்தின் சுற்றுச்சுவர் திடீரென சரிந்து, அங்கு பள்ளத்தில் நின்று மண் அள்ளிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது.
கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்கள் அலறினார்கள். இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து இடிபாடுகளில் சிக்கிய பெண் உள்பட 3 பேரையும் மீட்டனர். அவர்களை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
ஆனால் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கூலி தொழிலாளி மோகன் (வயது 18) என்பவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். மேலும் காயம் அடைந்த மன்னார்(52), தீபா(30) ஆகிய 2 பேரும் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் மன்னார், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி, மதுரவாயல் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் பூந்தமல்லி போலீசார், பள்ளத்தில் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளுக்குள் வேறு யாராவது சிக்கி உள்ளார்களா? என்பது குறித்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் கட்டிட இடிபாடுகளை அகற்றி ஆய்வு செய்தனர். அதில் வேறு யாரும் இடிபாடுகளில் சிக்கவில்லை என்பது தெரியவந்தது.
இந்த விபத்து தொடர்பாக பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர். போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாத காரணத்தால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.