Designed by Iniyas LTD
அதிமுகவின் தேர்தல் பிரசாரத்தை சென்னையில் நாளை தொடங்குகிறார் – ஜெயலலிதா
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் வருவதை முன்னிட்டு நாளை சனிக்கிழமை (ஏப்ரல் 9) பிரசாரத்தை முதல்வர் ஜெயலலிதா சென்னையில் தொடங்குகிறார்.
அதிமுக வேட்பாளர்களின் பட்டியலும், தேர்தல் பிரசார இடங்கள் குறித்த விவரமும் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. இதன்படி, ஏப்ரல் 9-ஆம் தேதி சென்னையில் பிரசாரம் தொடங்குகிறது. மே 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பிரசார பொதுக் கூட்டங்கள்:
மக்களவைத் தேர்தலின்போது, வாக்காளர்களையும் கவரும் வகையில் முக்கியமான இடங்களில் பிரசாரப் பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இவற்றில் முதல்வர் ஜெயலலிதா பேசினார். இதேபோன்ற ஏற்பாடுகள் சட்டப் பேரவைத் தேர்தலிலும் செய்யப்பட்டுள்ளது.
முதலில், சென்னை, புறநகர்ப் பகுதிகளில் உள்ள வேட்பாளர்களை ஆதரித்து 9-ஆம் தேதி பிரசாரத்தை தொடங்குகிறார். இதையடுத்து, அனைத்துத் தொகுதிகளிலும் வாக்காளர்களைச் சந்திக்கும் வகையில் 14 நாள்கள் பிரசாரம் செய்யும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை, புறநகரில் உள்ள 16-க்கும் மேற்பட்ட தொகுதிகளைச் சேர்ந்த வேட்பாளர்களை ஒரே மேடையில் நிறுத்தவும், அந்த தொகுதிகளைச் சார்ந்த வாக்காளர்கள் கூட்டத்தில் பங்கேற்கவும் மிகப் பெரிய இடம் தேவைப்படுகிறது. இதற்கு முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகரில் போதுமான இடம் இல்லை. எனவே, தீவுத் திடலில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனாலும், ஆர்.கே.நகரிலும் போதுமான இடம் கிடைத்தால் அங்கேயே நடத்துவோம்’ என்று அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தேர்தல் அறிக்கை வெளியீடு:
சென்னையில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலேயே, தேர்தல் அறிக்கையையும் முதல்வர் ஜெயலலிதா வெளியிட வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின. இதில், விவசாயம், தொழில் போன்ற பிரதானத் துறைகளுக்கான முன்னேற்றத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் அதிகம் இடம்பெறும் என்று தெரிகிறது.
வேட்பாளர்களுடன் ஜெயலலிதா சந்திப்பு:
இதனிடையே, அதிமுக வேட்பாளர்கள், கட்சியின் மாவட்டச் செயலர்கள், முக்கிய நிர்வாகிகளை புதன், வியாழக்கிழமைகளில் ஜெயலலிதா சந்தித்துப் பேசுகிறார். அப்போது, தேர்தல் தொடர்பான ஆலோசனையை அவர் அளிக்கிறார்.