Designed by Iniyas LTD
சென்னையில் 25 ரெயில் நிலையங்கள் பதற்றமானவை
சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த மாதம் (ஜூன்) 24-ந்தேதி கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து அனைத்து ரெயில் நிலையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ரெயில் நிலையங்களில் 25 ரெயில் நிலையங்கள் பதற்றமான பகுதிகளாக கண்டறியப்பட்டு இருப்பதாகவும், அதில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ரெயில்வே போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:- சென்னை மற்றும் புறநகர் ரெயில் நிலையங்களில் பதற்றமான ரெயில் நிலையங்கள் எவை என்பது குறித்து சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தினோம். அதில் 25 ரெயில் நிலையங்கள் பதற்றமான பகுதிகள் என்று தெரியவந்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை மொத்தம் 18 ரெயில் நிலையங்கள் இருக்கின்றன.
இதில் 16 ரெயில் நிலையங்களும், பறக்கும் ரெயில் நிலையங்களில் வேளச்சேரி, இந்திராநகர், பூங்கா ரெயில் நிலையங்களும், சென்டிரல் மூர்மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் மார்க்கமாக செல்லும் மின்சார ரெயில்கள் நின்று செல்லும் ரெயில் நிலையங்களில் ஆவடி, பெரம்பூர், நெமிளிச்சேரி ரெயில் நிலையங்களும், தாம்பரம்-செங்கல்பட்டு இடையே உள்ள ரெயில் நிலையங்களில் கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டாங்கொளத்தூர் ஆகிய ரெயில் நிலையங்களும் பதற்றமான ரெயில் நிலையங்கள் ஆகும்.
இந்த ரெயில் நிலையங்களில் அதிகாலை 4 மணி முதல் காலை 11 மணி வரையிலும், அதேபோல் மாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரையிலும் போலீஸ் பாதுகாப்பு இருப்பதற்கு ஏதுவாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது குறித்து ஆய்வும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ரெயில் நிலையத்தில் உள்ள ஒரு நடைமேடைக்கு 4 கேமராக்கள் வீதம் பொருத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல், அனைத்து ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பணிக்காக போலீசார் இருப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்புக்கு பயணிகளும் ஒத்துழைக்க வேண்டும். ரெயில் நிலையத்துக்கு வரும் பிரதான நுழைவுவாயில் பகுதியை மட்டும் பயன்படுத்தினால் அவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். ஆனால் சில பயணிகள் குறுக்கு பாதையில் செல்வதால் அவர்களுக்கு எந்தவகையில் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்?. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.