தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்க கடும் எதிர்ப்பு!

sail_484323a_jpg_484323fமத்திய அரசின் மிகப்பெரிய ‘செயில்’ இரும்பு நிறுவனத்துக்கு சொந்தமாக, சேலம், பத்ராவதி, துர்காபூர் ஆகிய இடங்களில் 3 சிறப்பு உருக்காலைகள் இயங்கி வருகின்றன. இந்த 3 நிறுவனங்களின் பங்குகளையும் தனியாருக்கு விற்க மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கி உள்ளதாக ‘செயில்’ நிறுவனம் கடந்த வாரம் அறிவித்தது.

மத்திய அரசின் இந்த முடிவு தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை கைவிட வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த பிரச்சினையை தமிழக எம்.பி.க்கள் நேற்று பாராளுமன்றத்திலும் எழுப்பி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக 267-வது விதியின் கீழ் மேல்- சபையில் நோட்டீசு ஒன்றை அளித்து இருந்த தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, பின்னர் பூஜ்ஜிய நேரத்தின் போது இந்த பிரச்சினையை எழுப்பி பேசினார்.

அவர் கூறுகையில், ‘நிதி ஆயோக் அமைப்பின் அறிவுறுத்தலின் பேரில் சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்பதற்கு கொள்கை அளவில் அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. இது பிராந்தியம் மற்றும் நாட்டின் தொழில்துறை வளர்ச்சியில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்’ என்றார்.

சேலம் உருக்காலை ஒரு லாபம் ஈட்டும் நிறுவனம் என்று கூறிய திருச்சி சிவா, அதை தனியாருக்கு விற்பதன் மூலம் அதில் பணியாற்றும் 2,500 முழுநேர பணியாளர்கள் மற்றும் 5 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.பி. டி.கே.ரங்கராஜனும் இந்த பிரச்சினையை வலியுறுத்தி பேசியதுடன், சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என கேட்டுக்கொண்டார்.

பின்னர் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் விஜிலா சத்யானந்த், சேலம் உருக்காலையின் பங்குகளை தனியாருக்கு விற்பதை தங்கள் கட்சி கடுமையாக எதிர்க்கிறது என்று கூறினார். முன்னதாக திருச்சி சிவா எம்.பி. பேசும்போது குறிக்கிட்ட விஜிலா சத்யானந்த், கேள்வி ஒன்றை எழுப்ப முயன்றார். ஆனால் அதற்கு அவை துணைத்தலைவர் பி.ஜே.குரியன் அனுமதிக்கவில்லை.

சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு காங்கிரஸ் கட்சியும் தனது எதிர்ப்பை அவையில் பதிவு செய்தது. அந்த கட்சியை சேர்ந்த பி.கே.ஹரிபிரசாத் எம்.பி. இதை வலியுறுத்தி பேசினார்.

Comments
Loading...