Designed by Iniyas LTD
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு சுதந்திரக் கட்சி எனக்கு அழைப்பு விடுத்தது: சி.வி.விக்னேஸ்வரன்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சில உறுப்பினர்கள் தனக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், ஒவ்வொரு கட்சிகளும் தங்களது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் விடயத்தில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பலமான வேட்பாளரை நிறுத்த வேண்டுமென்பதில் ஏனைய கட்சிகளும் திடமாக உள்ளன.
ஆனாலும் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் குறித்து அறிவிக்காத நிலையில், வேட்பாளர் குறித்து அந்த கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து சில முரண்பட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இத்தகையதொரு சூழ்நிலையிலேயே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தம்மை போட்டியிடுமாறு சுதந்திர கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்ததாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.