தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 132 இடங்களில் போராட்டம்: முடங்கியது சென்னை

chennai-marina1132 இடங்களில் நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக, சென்னை திங்கள்கிழமை முடங்கியது.  இது குறித்து விவரம்:
மெரீனாவில் மாணவர்கள் திங்கள்கிழமை போராட்டத்தை கைவிட மறுத்ததாலும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாலும் சென்னை முழுவதும் பதற்றமும், பரபரப்பும் தொற்றிக் கொண்டது. இதன் காரணமாக ஆங்காங்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக அமைப்பினும் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். காலை தொடங்கிய இந்த போராட்டங்கள் மாலை வரை நடைபெற்றது. சில இடங்களில் இந்த போராட்டங்கள் வன்முறைக்கும் இழுத்துச் செல்லப்பட்டது.
இதன் விளைவாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் கடைகள் மூடப்பட்டன. அதேபோல நண்பகல் 12 மணிக்கு பின்னர் சென்னை முழுவதும் ஆங்காங்கு முக்கியமான சாலைகளிலும், சாலை சந்திப்புகளிலும்,அரசு அலுவலகங்கள் முன்பும் போராட்டக்காரர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன. சில இடங்களில் போராட்டக்காரர்கள், அரசு பேருந்துகள் மீது கற்களையும் வீசினர்.
இதன் விளைவாக நண்பகலில் இருந்து சென்னையில் அரசு பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும் அரசு பேருந்துகள் ஆங்காங்கு அரசு பணிமனைகளில் பாதுகாப்பாக நிறுத்தும்படி போலீஸôர் அறிவுறுத்தினர்.அதோடு குறைவான அளவிலேயே ஆட்டோகள், கால்டாக்ஸிகள் உள்ளிட்டவை இயங்கியதால் பொதுமக்கள் மிகவும் சிரமடைந்தனர். இதில் பள்ளிக்கு வந்த மாணவர்களும், அலுவலகங்களுக்கு ஊழியர்களும் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் அவதியடைந்தனர்.
நண்பகலில் இருந்து மாலை செனனை முழுவதும் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றது. இவ்வாறு சென்னை முழுவதும் திங்கள்கிழமை சுமார் 132 போராட்டங்கள் நடைபெற்றன. இதில் 113 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இப் போராட்டங்களினால் சென்னை முழுவதும் இரவு 8 மணி வரை முடங்கியது. இதில் 6 மணிக்கு பின்னர் படிப்படியாக ஒவ்வொரு இடத்திலும் போராட்டம் கைவிடப்பட்டது.
இதனால் சிறிது,சிறிதாக போக்குவரத்து சீரடைய தொடங்கியது. இருப்பினும் அண்ணா சாலை, பூந்தமல்லி சாலை, ஆற்காடு சாலை,டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை,வாலஜா சாலை,பெசன்ட் சாலை, அவ்வை சண்முகம் சாலை, பாரதி சாலை, ராஜீவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலை ஆகியவற்றில் போக்குவரத்து சீராவதற்கு பல மணி நேரமானது.இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதியடைந்தனர்.

Comments
Loading...