தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜெனீவாத் தீர்மானம் குறித்து உயர் மட்ட ஆலோசனை..

ஐக்கியநாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடுத்த கட்ட நகர்வு குறித்து தீர்மானிப்பதற்காக அரச உயர் மட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

இதற்காக எதிர்வரும் தமிழ், சிங்களப் புத்தாண்டுக்குப் பின்னர் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரச உயர் மட்டத்தினர் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தத் தீர்மானிக்கப்பட் டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் மூலம் முன்மொழியப்பட்டுள்ள பிரேரணைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எவ்வாறான அணுகுமுறைகளைக் கையாள்வது என்பது பற்றி இதன்போது ஆலோசிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரேரணைகளை நடைமுறைப் படுத்துவதற்குத் தேசிய பொறி முறையொன்று உருவாக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் ,

அது தொடர்பிலும் இந்த உயர்மட்டக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் திலக் மாரப்பன கூறியுள்ளார்.

இதேவேளை ஐ. நா. மனித உரிமைகள் கவுன்ஸில் இலங்கை மீது சுமத்தியுள்ள குற்றச் சாட்டுகளை எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதோடு , அரசாங்கம் தன்னிச்சையாக மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை வழங்கிவிட்டதாக எதிரணியின் சிலர் சுமத்தும் குற்றச்சாட்டுகளையும் ஏற்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் முழுமையான இணக்கத்துடன் தயாரிக்கப்பட்ட ஆவணமே ஜெனீவாவில் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை , அடுத்த வாரமளவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸிலின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்குப் பயணம் செய்து நிலைவரங்களை ஆராய்ந்து செல்லவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...