Designed by Iniyas LTD
ஜெயலலிதாவின் வழக்கு 27 ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுமீது நடைபெற்ற விசாரணையில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் முதற்கட்ட வாதத்தை நிறைவு செய்தார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை நீதிபதி குமாரசாமி முன் நடைபெற்று வருகிறது.
ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ், சொத்துக்குவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையால் கூறப்பட்ட 66.65 கோடியை விட ஜெயலலிதாவிற்கு கூடுதலாக வருவாய் வந்ததாக வாதாடினார். மேலும், ஜெயலலிதாவிற்கு 96 லட்சம் ரூபாய் கூடுதலாக சேமிப்பு இருப்பதாகவும் திராட்சை தோட்டத்தின் மூலம் 54 லட்சமும், நமது எம்.ஜி.ஆர் மூலம் 14 கோடி ரூபாயும் வருவாய் வந்ததாகவும் கூறினார்.
கூடுதல் வருவாயை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கவனத்தில் கொள்ளாமல் பொய்யான வழக்கு தொடர்ந்ததாக அவர் வாதாடினார். எனவே, சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து, சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்ய வேண்டும் என்றும் நாகேஸ்வரராவ் வாதாடினார். ஜெயலலிதா தரப்பு வாதத்தைக் கேட்ட நீதிபதி குமாரசாமி வழக்கு விசாரணையை 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.