Designed by Iniyas LTD
ஜெயலலிதாவிற்கு வாழ்த்து தெரிவித்த மோடி
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டில், நேற்று கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயலலிதா குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனையடுத்து, பிரதமர் நரேந்திரமோடி, ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். இதேபோல், தமிழக கவர்னர் கே.ரோசய்யா ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதோடு, பூங்கொத்து ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மற்றும் மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை மந்திரி நஜ்மா ஹெப்துல்லா ஆகியோர் தங்களது நல்வாழ்த்துகளை தொலைபேசி மூலம் ஜெயலலிதாவுக்கு தெரிவித்துக் கொண்டனர். மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் அதுல்குமார் அஞ்சன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன், எம்.எல்.ஏ., அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார், எம்.எல்.ஏ., அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன், எம்.எல்.ஏ., தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவன அமைப்பாளர் உ.தனியரசு, எம்.எல்.ஏ., தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் பெ.ஜான் பாண்டியன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி, இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் எம்.பஷீர் அகமது, தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் எஸ். ஷேக் தாவூத், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் வேட்டவலம் கே.மணிகண்டன் ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை ஜெயலலிதாவுக்கு தெரிவித்துக் கொண்டனர்.