Designed by Iniyas LTD
ஜெயலலிதா உடல்நிலை: டிராபிக் ராமசாமி மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கௌல், விளம்பரத்திற்காக இந்த மனு தாக்கல் செய்திருப்பதாகக் குற்றம்சாட்டினார்.
மேலும், மருத்துவமனையின் செய்திக் குறிப்புகளை மனுதாரர் பார்க்கவில்லையா? அரசியல் காரணத்துக்காக நீதிமன்றத்தை பயன்படுத்தாதீர்கள் என்று மனுதாரருக்கு நீதிபதி காட்டமாகக் கூறினார்.
முதல்வர் உடல்நிலை குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள முதல்வரின் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்று கோருவது சரியல்ல. தாற்காலிக முதல்வரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் நீதிபதி எஸ்.கே. கௌல் தெரிவித்தார்.