Designed by Iniyas LTD
ஜெயலலிதா பற்றி வதந்திகள் பரப்புபவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை
தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22-ந்தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சலால் அவதிப்பட்ட அவர் உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 20 நாட்களாக அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
லண்டன் டாக்டர் ரிச்சர்டு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் ஆகியோரும் சென்னை வந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த
னர். எந்த மாதிரியான சிகிச்சைகள் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படுகிறது என்பது பற்றியும், அவரது உடல் நிலையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் குறித்தும் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் அவ்வப்போது தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி சமூக வலை தளங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.
பேஸ்புக், வாட்ஸ்-அப், யுடியூப், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பலர் வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த வதந்தியை பரப்பி வருகிறார்கள். இப்படி பரப்பப்படும் வதந்தி காட்டுத்தீ போல பரவி சில நிமிடங்களிலேயே பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி பரப்பப்படும் வதந்தியை தடுப்பதற்காக அ.தி.மு.க. சார்பில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 4-ந்தேதி புகார் அளிக்கப்பட்டது. அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் மாநில செயலாளரான ராமச்சந்திரன் இந்த புகாரை அளித்தார். அந்த புகார் மனுவில், சதீஷ் சர்மா என்கிற பேஸ்புக் கணக்கில் முதல்-அமைச்சரின் உடல் நிலை பற்றி தவறான பொய்யான கெட்ட நோக்கத்துடன் வதந்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. எனவே முகநூலில் முதல்-அமைச்சரின் உடல் நிலை பற்றி வதந்தி பரப்பியவர் யார் என்பதை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுத்து முகநூல் பதிவை நீக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியதாக 153, 505(1), 505(2) ஆகிய 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதே போல நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜ்கமல் என்பவரும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தனியாக ஒரு புகார் அளித்தார். கடந்த 8-ந்தேதி அளிக்கப்பட்ட இந்த புகாரில் அப்பல்லோ மருத்துவமனை பணியாளர் பேசுவது போல பேசி முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை பற்றிய வதந்தி, ‘‘தமிழ் எண்டர்டெயின்மெண்ட்’’ என்கிற இணையதளத்தில் பரப்பப்பட்டுள்ளதாகவும், அதன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பாகவும் தனி வழக்கு போடப்பட்டது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி வதந்தியை பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில்குமார், கூடுதல் கமிஷனர் வெங்கடாஜலபதி ஆகியோரது மேற்பார்வையில் விசாரணை முடுக்கி விடப்பட்டது. உதவி கமிஷனர் கனகராஜ், இன்ஸ்பெக்டர்கள் மெல்வின், கிளாட்சன் ஜோஸ், அன்பரசு ஆகியோர் கொண்ட சைபர் கிரைம் போலீஸ் தனிப்படையினர் பேஸ்புக் மற்றும் இணைய தளங்களை ஆய்வு செய்தனர். சதீஷ் சர்மா என்ற முகநூல் கணக்கை ஆய்வு செய்து அதில் உள்ள விவரங்களை சேகரித்த போது, சதீஷ்குமார் என்பவர் அந்த முகநூல் கணக்கை தொடங்கி இருப்பது தெரியவந்தது.
இவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள தேவனாங்குறிச்சி காந்திநகர் ஆகும். எம்.சி.ஏ. படித்து விட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வரும் சதீஷ்குமாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முதல்-அமைச்சரின் உடல் நிலை பற்றி வந்த தகவல்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு நண்பர்களோடு பகிர்ந்து கொண்டேன் என வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதேபோல ‘‘தமிழ் எண்டர்டெய்ன்மெண்ட்’’ இணைய தளத்தில், அப்பல்லோ ஆஸ்பத்திரி பணியாளர் பேசியது போல பொய்யான பதிவை பரவவிட்டது மதுரை பாண்டியன் நகரை சேர்ந்த மாடசாமி என்பதும் தெரிய வந்தது. மதுரை திருமங்கலத்தில் உள்ள ஐ.டி.ஐ. ஒன்றில் ஏ.சி. மெக்கானிக் முடித்துள்ள இவர், இந்த வலைதளத்தை உருவாக்கி பராமரித்து வருவதும் தெரிய வந்தது. அவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து மாடசாமியும் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய வதந்தி பரப்பியதாக சென்னை சைபர் கிரைம் போலீசில் மொத்தம் 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
18 பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட புகார் மனுக்களை அளித்ததின் பேரில் இந்த வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் 2 வழக்குகளில் மட்டுமே போலீசார் நடவடிக்கை எடுத்து சதீஷ்குமார், மாடசாமி ஆகியோரை கைது செய்துள்ளனர். மீதி 41 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் தொடர்புடையவர்களையும் படிப்படியாக கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். எனவே முதல்-அமைச்சர் பற்றிய வதந்தியை பரப்பியவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட உள்ளனர். இதுபோன்று வதந்தியை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, சமூக வலைதளங்களில் தவறான தகவல்களையும், வதந்திகளையும் பரப்புவது சட்டப்படி குற்றமாகும். இதுபோன்ற குற்றங்களுக்கு 7 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.