Designed by Iniyas LTD
ஜெயின் ஆர்கே நகரில் ஸ்டாலின் பிரச்சாரம்
தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி, சமூக சமத்துவப்படை ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. 
இதில், காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிக்கு தலா 5 தொகுதிகளும், மற்ற 3 கட்சிகளுக்கும் தலா 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் விவரம் இன்று இறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
மற்ற கட்சிகளுக்கும் எந்த தொகுதிகள் என்பதும் வெளியாகலாம் என்று தெரிகிறது. தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்த எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் மனகசப்பு ஏற்பட்டது. இதனால் அக்கட்சி தற்போது மதில் மேல் பூனையாக உள்ளது. புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தி.மு.க. கூட்டணிக்கு வரலாம் என்று எதிர்பார்ப்பு நிலவினாலும், அவரை தி.மு.க. வரவேற்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் தி.மு.க. 180 தொகுதிகளில் வேட்பாளர்களை களம் இறக்கும் மனநிலையில் உள்ளது. தி.மு.க.வில் யாருக்கு, யார்? சீட் என்ற பட்டியல் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கியவுடன் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இன்றே உறுதி செய்யப்பட்டுவிடும். முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி. உள்பட 8 பேர் குழுவினர் கடந்த சில மாதங்களாக தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியில் ஈடுபட்டனர். அதன்படி, தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணி நேற்றுடன் முடிவடைந்தது. தி.மு.க. தேர்தல் அறிக்கையை வருகிற 7-ந்தேதி (நாளை) கருணாநிதி வெளியிடுவார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளநிலையில், தி.மு.க. வேட்பாளர் பட்டியலும் அன்றைய தினம் வெளியிடப்படலாம் என்று தி.மு.க. வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா வருகிற 9-ந்தேதி சென்னையில் பிரசாரத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளார். இந்தநிலையில் அ.தி.மு.க.வுக்கு முன்னதாகவே பிரசாரத்தை தொடங்கிட வேண்டும் என்ற முனைப்பில் தி.மு.க. இருக்கிறது. எனவே தி.மு.க. பிரசார பயணம் 8-ந்தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கருணாநிதி, மு.க.ஸ்டாலின் பிரசார பயண திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது பிரசாரத்தை தொடங்குவார் என்று கூறப்படுகிறது.