Designed by Iniyas LTD
டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் ‘ஹாட்ரிக்’ சாம்பியன்
ஏ.டி.பி. உலக டூர் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் ‘ஹாட்ரிக்’ சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். காயம் காரணமாக கடைசி நேரத்தில் பெடரர் இறுதிப்போட்டியில் இருந்து விலகினார்.
உலக டூர் டென்னிஸ்
ஏ.டி.பி. உலக டூர் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்தது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒற்றையர் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனும், உலகின் நம்பர் ஒன் வீரருமான நோவாக் ஜோகோவிச் (செர்பியா), உலகின் 2–ம் நிலை வீரர் ரோஜர் பெடரரை (சுவிட்சர்லாந்து) எதிர்கொள்ள இருந்தார்.
யாரும் எதிர்பாராத வகையில் முதுகுவலி காரணமாக ரோஜர் பெடரர் இறுதிப்போட்டி தொடங்குவதற்கு 30 நிமிடங்கள் முன்னதாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் நோவாக் ஜோகோவிச் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு மீண்டும் சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். 45 ஆண்டு கால உலக டூர் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஒரு வீரர் விலகியது இதுவே முதல் முறையாகும்.
ஜோகோவிச் ‘ஹாட்ரிக்’ சாம்பியன்
27 வயதான ஜோகோவிச் தொடர்ந்து 3–வது முறையாக (ஹாட்ரிக்) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறார். 2012, 2013 மற்றும் 2008–ம் ஆண்டிலும் இந்த பட்டத்தை வென்று இருந்தார். இந்த சீசனில் ஜோகோவிச் வென்ற 7–வது பட்டமாகும். மொத்தத்தில் அவருக்கு கிடைத்த 48–வது பட்டம் இதுவாகும்.
உலக டூர் டென்னிஸ் பட்டத்தை தொடர்ந்து 3 முறை வென்ற 3–வது வீரர் என்ற பெருமையை ஜோகோவிச் பெற்றார். ஏற்கனவே லி நாஸ்டாசே (ருமேனியா, 1971–1973), இவான் லென்டில் (செக்கசுலோவக்கியா, 1985–1987) ஆகியோர் 3 முறை இந்த பட்டத்தை வென்று இருந்தனர்.
பிரையன் சகோதரர்கள் வெற்றி
இதன் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் பாப்–மைக் பிரையன் சகோதரர்கள் இறுதிப்போட்டியில் 6–7, 6–2, 10–7 என்ற செட் கணக்கில் இவான் டோடிச் (குரோஷியா)–மார்செலோ மெலோ (பிரேசில்) ஜோடியை தோற்கடித்து 4–வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. மொத்தத்தில் இந்த ஜோடிக்கு 103–வது பட்டம் இதுவாகும்.
வெற்றிக்கு பின்னர் ஜோகோவிச் அளித்த பேட்டியில் கூறியதாவது:–
தற்போது நான் ஆட்டத்தில் உச்சநிலை பார்மில் இருக்கிறேன். உடல்தகுதியிலும் நல்ல நிலையில் உள்ளேன். வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு உலக தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தை தக்க வைக்க போராடுவேன். இவான் லென்டிலுக்கு அடுத்தபடியாக உலக டூர் பட்டத்தை தொடர்ந்து 3 முறை வென்ற வீரர் நான் என்றாலும் இறுதிப்போட்டியில் வெறுமனே வெற்றி பெற்றது ஏமாற்றம் அளிக்கிறது. உலக டூர் போட்டியில் போட்டியின்றி வெற்றி பெறுவது இதுவே முதல்முறையாகும். உண்மையை சொல்லப்போனால் இது பற்றி பேசுவது அசிங்கமான விஷயமாகும். மிகப்பெரிய போட்டியில், பெரிய எதிராளிக்கு எதிராக இதுபோன்ற வெற்றியை பெற ஒருபோதும் விரும்பியதில்லை.
போராடும் குணம் கொண்ட பெடரர் போட்டியில் இருந்து எளிதில் விலகக்கூடியவர் அல்ல. அவர் தனது ஆட்ட வாழ்க்கையில் 3 முறை மட்டுமே போட்டியின் போது காயத்தால் விலகி இருக்கிறார். டேவிஸ் கோப்பை இறுதிப்போட்டியில் ஆடுவதற்காக இந்த போட்டியில் இருந்து பெடரர் விலகி இருப்பார் என்று நான் நினைக்கவில்லை. இந்த ஆண்டில் இருவருக்கும் இது மிகப்பெரிய போட்டிகளில் ஒன்றாகும். பெடரர் காயத்தில் இருந்து விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.
இவ்வாறு ஜோகோவிச் கூறினார்.
பெடரர் வருத்தம்
33 வயதான பெடரர் கருத்து தெரிவிக்கையில், ‘விளையாடுவதற்கு உரிய உடல் தகுதி இல்லாததால் போட்டியில் இருந்து விலகுகிறேன். ஆட முடியாமல் போனதற்காக வருந்துகிறேன். இந்த வயதில் சிரமமான முடிவை எடுக்க விரும்பவில்லை’ என்றார்.