Designed by Iniyas LTD
டெல்லியில் 28வது நாளாக விவசாயிகள் போராட்டம்: தமிழர்கள் பலர் குடும்பத்துடன் ஆதரவு
தேசிய வங்கிகளில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்வது, வறட்சி நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த மாதம் 14–ந் தேதி முதல் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று அவர்களின் போராட்டம் 28வது நாளை எட்டியுள்ளது.
நேற்று பாடை கட்டி இறுதி ஊர்வலம் நடத்தி போராட்டம் நடத்தினார்கள். மதுரையைச் சேர்ந்த சுப்பராவ் (வயது 28) என்ற விவசாயி பாடையில் படுத்துக் கொள்ள மற்ற விவசாயிகள் சங்கு ஊதியும், மணி அடித்தும் பறை வாசித்தும் வர ஜந்தர் மந்தர் சாலையில் இறுதி ஊர்வலம் நடத்தினார்கள். அப்போது விவசாயிகள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்தனர்.
நேற்றைய போராட்டத்துக்கு டெல்லி வாழ் தமிழர்கள் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து ஆதரவு தெரிவித்தனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும் ஜந்தர் மந்தர் சாலையில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
இதைத்தொடாந்து தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த கலைஞர்கள் சிலர் வீதி நாடகம் நடத்தினார்கள். விவசாயிகள் கடன் பெறுவது போலவும் அவர்களிடம் கடனை வசூலிக்க வங்கி அதிகாரிகள் கடுமையாக நடந்து கொள்வது போலவும், இதனால் விவசாயிகள் வேறு வழியின்றி தற்கொலை செய்து கொள்வது போன்றும் நடித்துக் காட்டினார்கள். இந்த சவ ஊர்வலமும் வீதி நாடகமும் அந்த பகுதி மக்களை வெகுவாக கவர்ந்ததுடன், தமிழக விவசாயிகள் பற்றி வேதனையடைவும் வைத்தது