Designed by Iniyas LTD
டெல்லி சட்டமன்ற தேர்தல் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவான நிலையை உண்டாக்கும் – கிரன்பேடி
இந்தியத் தலைநகரில் டில்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு பின்னர் வெளியான அனைத்து கருத்துக் கணிப்பு முடிவுகளும் ஆம் ஆத்மி கட்சிக்கு அதிக அளவிலான இடங்களில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றன.
எனினும், பாரதிய ஜனதா கட்சி சென்ற சட்டமன்ற தேர்தலின்போது பெற்ற அதே அளவிலான இடங்களில் வெற்றி பெறும் என்றும் காங்கிரஸ் கட்சியே மிகவும் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்படும் என்றும் அந்தக் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
அவ்வாறே, இம்முறை இந்த மூன்று கட்சிகளையும் தவிர மற்றக் கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு சிறிதளவு கூட இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாரதிய ஜனதா கட்சியின் டில்லி முதல்வர் வேட்பாளரான கிரண் பேடி, இந்த கருத்துக் கணிப்புகள் கூறுவது போன்று முடிவுகள் அமையாது என்று கூறினார்.
வாக்குப்பதிவு நிறைவடைதற்கு முந்தைய சில மணித்தியாலங்களிலேயே பெருமளவில் வாக்குகள் பதிவானதாகவும் இந்த வாக்குகள் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவான நிலையை உண்டாக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வெளியாகி வரும் கருத்துக் கணிப்புகள் அனைத்தும் மாலை 3 மணிக்கு முன்னதாக பதிவு செய்யப்பட்டது என்பதால், வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள் மூலமாக உண்மை வெற்றி பெறும் என்றும் கிரண் பேடி நம்பிக்கை வெளியிட்டார்.
இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிவு பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த போதும், மக்கள் அதிக அளவில் வரிசையில் காத்திருந்த காரணத்தனால் அந்த நேரத்தைத் தாண்டியும் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது.
ஆம் ஆத்மி கட்சி தரப்பில் கருத்துக்கூறிய அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான யோகேந்திர யாதவ், கருத்துக் கணிப்புகளில் கூறியுள்ளதை விட தமது கட்சி அதிக அளவிலான இடங்களில் வெற்றி பெறும் என்று கூறினார்.
குறைந்தது 50க்கும் அதிகமான இடங்களில் தமது கட்சி வெற்றி பெறும் என்றும் அதிகப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியும் என்கிற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளரான அஜய் மாக்கன் வெளியிட்டுள்ள செய்தியில், அதிக ஆர்வத்துடன் வாக்களித்த டில்லி மக்களுக்கு நன்றி கூறியுள்ளார்.
தகுதியுடையவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று தான் பிரார்த்தனை செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தலை விட இம்முறை கூடுதல் சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதால், வெளிவரவுள்ள தேர்தல் முடிவுகள் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகின்றன.