Designed by Iniyas LTD
தட்கல் முறையில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் திட்டம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் நெடுந்தூரப் பேருந்துகளில் பயணம் செய்ய, தட்கல் முறையில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயகுமார் தெரிவித்துள்ளார். 
சட்டப்பேரவையில், 2016-17ம் ஆண்டு போக்குவரத்து துறை புதிய அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார். அப்போது, திருச்சி, மதுரை, சேலம் ஆகிய இடங்களில் உள்ள அரசு தானியங்கி பணிமனைகளில் அம்மா ஓட்டுநர் பயிற்சி நிறுவனம் தொடங்கப்படும் என்று தெரிவித்தார். அரசு பேருந்துகளில் நெடுந்தூர பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காக தட்கல் முறையில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் குறிப்பிட்டார். அதுமட்டுமல்லாமல், தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக நெடுந்தூரப் பேருந்துகளுக்கு செல்லிடப்பேசி தனி செயலி மூலம் முன்பதிவு செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
வாகனங்களின் அதிவேகத்தை கண்டறிய போக்குவரத்துத் துறையின் செயலாக்க அலுவலர்களுக்கு வேகம் கண்டறிந்து பதிவு செய்யும் கருவிகள் 95 லட்சம் செலவில் வழங்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் – பாலவாக்கம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் – காளிக்கோவில் ஆகிய இடங்களில் 40 லட்சம் செலவில் புதிய சோதனைச்சாவடி அமைக்கப்படும் என்றும், 20 வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு பல்லூடக படக்கருவி 14 லட்சம் செலவில் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.