Designed by Iniyas LTD
தந்தை பெரியாரின் 42-வது நினைவு தினம்: அரசியல் தலைவர்கள் மரியாதை
வைக்கம் வீரர் தந்தை பெரியாரின் 42-ஆவது நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகேயுள்ள பெரியார் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த உருவ படத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். திமுக பொருளாளர் ஸ்டாலின், அன்பழகன் உள்ளிட்டோரும் பெரியாருக்கு மரியாதை செய்தனர்.
அண்ணா சாலையில் ஊர்வலமாக வந்த திராவிடர் கழகத்தினர் பெரியாரின் கொள்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பின்னர் தி.க தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் பெரியாரின் உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
தேமுதிக தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் தலைவர் பெரியாரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் உருவப்படத்திற்கும் விஜயகாந்த் மலரஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர்.