Designed by Iniyas LTD
தனக்குரிய வரம்பை இந்தியப் பிரதமர் மோடி மீறுகிறார் –பாக்கிஸ்தான்
பலூசிஸ்தான் விவகாரம் தொடர்பாக தேவையற்ற கருத்துகளைத் தெரிவிப்பதன் வாயிலாக தனக்குரிய வரம்பை இந்தியப் பிரதமர் மோடி மீறுகிறார் என்று பாகிஸ்தான் விமர்சித்துள்ளது. ஐ.நா. சபை பொதுக் கூட்டத்தில் ஜம்மு – காஷ்மீர் பிரச்னையை பாகிஸ்தான் எழுப்பும் என்றும் அந்நாடு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில், பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பலூசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாகப் பிரிக்கக் கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது.
இத்தகைய போராட்டங்களை முன்னெடுக்கும் மக்களை பாகிஸ்தான் அரசு சித்திரவதைக்கு உள்ளாக்குவதாகவும், மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதனிடையே, காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக கடந்த வாரம் தில்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “பலூசிஸ்தான் பகுதி மக்களின் அடிப்படை உரிமைகளைப் பேணிக்காக்க இந்தியா துணைநிற்கும்’ என்று பகிரங்கமாக அறிவித்தார். இதே விஷயத்தை, தனது சுதந்திர தின உரையிலும் அவர் குறிப்பிட்டுப் பேசினார். பலூசிஸ்தான் பிரச்னையை சர்வதேச அளவில் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பிரதமர் மோடியின் இந்தக் கருத்துகளுக்கு பலூசிஸ்தான் விடுதலைக்காகப் போராடி வரும் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த விவகாரத்தை முன்னிறுத்தி இந்தியாவை பாகிஸ்தான் விமர்சித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நஃபீஸ் ஜகாரியா, வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது: ஜம்மு – காஷ்மீரில் அண்மையில் நிகழ்ந்த வன்முறையில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தியப் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 100-க்கும் அதிகமானோர் பார்வைத் திறனை இழந்தனர். காஷ்மீரில் வசிக்கும் மக்களுக்கு சுய நிர்ணய உரிமையை வழங்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், இன்றளவும் அந்த உரிமைகள் காஷ்மீர் மக்களுக்கு வழக்கப்படவில்லை. அந்த மாநிலத்தில் அரங்கேறும் மனித உரிமை மீறல்களை மூடி மறைப்பதற்காகவே இந்தியப் பிரதமர் மோடி பலூசிஸ்தான் குறித்து பேசியிருக்கிறார். இதன் மூலம் ஐ.நா. உடன்படிக்கையில் இடம்பெற்றுள்ள விதிகளையும், வரம்பையும் அவர் மீறியுள்ளார். ஜம்மு – காஷ்மீரில் நிகழும் மனித உரிமை மீறல்களைத் தடுக்க சர்வதேச நாடுகளும், அமைப்புகளும் முன்வர வேண்டும் என்றார் ஜகாரியா.