Designed by Iniyas LTD
தனியார் நிறுவனங்களுக்கு தமிழகத்தில் நிலம் எதுவும் கையகப்படுத்தப்படுவதில்லை – ஜெயலலிதா
நிலம் கையகப்படுத்துதல் சட்ட மசோதா விவகாரத்தில் அதிமுகவுக்கு இரட்டை நிலைப்பாடு இல்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெளிவுபடுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, திமுக தலைவர் கருணாநிதி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஜெயலலிதா, தனியார் நிறுவனங்களுக்கு தமிழகத்தில் நிலம் எதுவும் கையகப்படுத்தப்படுவதில்லை என குறிப்பிட்டுள்ளார். இதனால், தமிழகத்தில் விவசாயிகள் எந்தவித பாதிப்புக்கும் உள்ளாக மாட்டார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். நிலம் எடுப்பதில் தனியார் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளுக்கு சலுகைகள் அளிக்கப்படக்கூடாது என அதிமுக கொண்டுவந்த திருத்தத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2013ஆம் ஆண்டு முந்தைய மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தில், மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் அம்சங்கள் இருந்ததாலேயே அதனை அதிமுக எதிர்த்ததாக விளக்கமளித்துள்ள ஜெயலலிதா, தற்போது மாநில அரசுக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்டத்தை எதற்காக எதிர்க்க வேண்டும் எனவும் வினா எழுப்பியுள்ளார்.
விவசாயிகளின் நலன் பாதிக்காமல், அதுதொடர்பாக முடிவெடுக்க மாநில அரசுக்கு தற்போதைய மசோதாவில அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதால், இந்த விவகாரத்தில் அதிமுகவுக்கு இரட்டை நிலைப்பாடு இல்லை என அவர் கூறியுள்ளார். மீத்தேன் எரிவாயு திட்டம், காவிரி நதிநீர்ப் பங்கீடு, முல்லைப்பெரியாறு அணை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் விவசாயிகளின் நலன்பற்றி கருணாநிதி கவலைப்பட்டதில்லை என்றும் அதிமுக பொதுச் செயலாளர் விமர்சித்துள்ளார்.