தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தனியார் பள்ளிகளுக்கு சொந்தமான 200 வாகனங்களை ஆய்வு செய்த அதிகாரிகள்

தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு சொந்தமான 200 வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.school

இதையடுத்து தனியார் பள்ளி வாகனங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளனவா? என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி சென்னையை அடுத்த தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு சொந்தமான பஸ் மற்றும் வேன்கள் என 200 வாகனங்கள் கிழக்கு தாம்பரம் ரெயில்வே மைதானத்தில் நேற்று ஆய்வுக்கு கொண்டு வரப்பட்டன.

தாம்பரம் கோட்டாட்சியர் விமல்ராஜ் தலைமையில் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேஸ்வரன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கோவிந்தராஜ், கிருஷ்ணன் மற்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர். பள்ளி வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி, மருத்துவ முதல் உதவி பெட்டி, அவசரகால வழி, தாழ்தள படிக்கட்டு, தீயணைப்பு கருவி உள்ளிட்ட வசதிகள் உள்ளனவா? என அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது முறையாக பராமரிக்கப்படாத 5 பஸ்களை அதிகாரிகள் கண்டுபிடித்து அவற்றை சரி செய்து விட்டு வரும்படி திருப்பி அனுப்பினர்.

‘‘அனைத்து பள்ளி வாகனங்களும் முறையாக பரிசோதிக்கப்பட்டு தரமாக உள்ளதா? என பரிசோதித்த பின்னரே பள்ளி மாணவ–மாணவிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்க முடியும்’’ என தாம்பரம் கோட்டாட்சியர் விமல்ராஜ் தெரிவித்தார். இதேபோல் திருவான்மியூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் தனியார் பள்ளி வாகனங்களை கொட்டிவாக்கம் நெல்லை நாடார் பள்ளி வளாகத்தில் வைத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Comments
Loading...