Designed by Iniyas LTD
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை மையம்
இலங்கை அருகே உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) அநேக இடங்களில் மழை பெய்யும் என்றும், ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. 
தமிழ்நாட்டில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் ஆகிய 4 மாதங்கள் தென் மேற்கு பருவமழை காலம். இந்த காலத்தில் தமிழகத்திற்கு ஒரு ஆண்டுக்கு பெய்ய வேண்டிய சராசரி அளவில் குறைந்தஅளவு மழை தான் கிடைக்கும். ஆனால் வடகிழக்கு பருவமழை காலம்தான் அதிக மழையை கொடுக்கக்கூடியது. வடகிழக்கு பருவமழை கணக்கிடும் காலம் அக்டோபர் மாதம் 1-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரையாகும். ஆனால் இந்த வருடம் அக்டோபர் 20-ந்தேதிக்கு முன்பே வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. இந்த பருவமழை காலத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரே நாளில் மிக கனமழை பெய்தது.
அதன் காரணமாக வெள்ளச்சேதம் பெரிய அளவில் ஏற்பட்டது. கோவை, திண்டுக்கல், நாமக்கல், தேனி, திருச்சி, கரூர், ராமநாதபுரம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் சராசரி மழை பெய்துள்ளது. மீதம் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கூடுதலாக மழை பெய்து இருக்கிறது. புதுச்சேரியிலும் கூடுதலாக மழை பெய்து இருக்கிறது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் நேற்று வரை, சராசரியை விட கூடுதலாக 54 சதவீதம் மழை பெய்துள்ளது. வருகிற 31-ந்தேதியுடன் வடகிழக்கு பருவமழை காலம் முடிவடைகிறது. ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி இறுதிவரை பெய்யக்கூடியது குளிர்கால மழையாகும். பின்னர் மார்ச் மாதம் முதல் மே மாதம் முடிய கோடை காலம் ஆகும்.
இன்றைய வானிலை குறித்து நேற்று சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:- தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கை அருகே உள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழைபெய்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைய வாய்ப்பு இல்லை.
நாளை முதல் மழையின் அளவு குறையும். இன்று (செவ்வாய்க்கிழமை) தென் மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்பு உள்ளது. இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைபெய்யும். நேற்று காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:- ராமேசுவரம் 7 செ.மீ., பாம்பன் 6 செ.மீ., தங்கச்சிமடம் 5 செ.மீ., ராமநாதபுரம், மண்டபம் தலா 4 செ.மீ., ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி தலா 3 செ.மீ., பாபநாசம் 2 செ.மீ., கடலாடி, திருச்செந்தூர், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது. இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.