தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழகத்திலிருந்து 24பேர் வருகைதர, ஈழத்திலிருந்து 12 பேர் அவுஸ்ரேலியாவுக்கு அகதியாகப் பயணம்

asylum-seekers-600x3371

ஈழப் புகலிடக் கோரிக்கையாளர்களைக் கொண்ட படகு ஒன்று அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவின் கொகோஸ் தீவுகளை இந்த படகு சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. திங்கட்கிழமை காலையில் ஈழத்தவர்களைக் கொண்ட படகு கொகோஸ் தீவுகளை அடைந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதேசத்தில் சீரற்ற காலநிலை நிலவி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டு காலப்பகுதியில் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் படகு ஒன்று அவுஸ்திரேலியாவை சென்றடைந்தமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

10 முதல் 11 மீற்றர் நீளமான மரத்திலான படகு ஒன்றில் புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவை சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 12 பேர் இந்தப் படகில் பயணித்துள்ளதாக படகை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கமோ அல்லது எல்லைப் பாதுகாப்புப் பிரிவினரோ இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்தப் படகுப் பயணிகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனரா அல்லது கைது செய்யப்பட்டனரா என்பது பற்றிய சரியான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இதேவேளை இடம்பெயர்ந்து தமிழகம் சென்ற 24 ஈழத் தமிழர்கள் இன்று தாயகம் திரும்பவுள்ளனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின் கைதிகள் தொடர்பான ஆணையாளர் அலுவலகத்தின் உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மீள்குடியேற்ற அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு நாடு திரும்புபவர்களில் ஏழு பேர் பெண்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 24 பேரே இன்று இலங்கைக்கு மீளத் திரும்பவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...