Designed by Iniyas LTD
தமிழகத்திலும் ஈழத் தமிழருக்கு சாவுதானா?
தமிழகத்தின் மதுரை, திருப்பரங்குன்றம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டை அருகில் உள்ள உச்சம்பட்டி ஈழத் தமிழ் அகதிகள் முகாமை பார்வையிடச்சென்ற அதிகாரி துரைப்பாண்டியன் என்பவர், முகாமிற்குள் சோதனையிட்டபோது இல்லாமல் தாமதமாக உள்ளே வந்த அகதி ரவி என்பவரின் பெயரை பட்டியலில் இருந்து நீக்கி உள்ளார்.
சொல்லாமல் திடீரென வந்தால் அகதிகள் எல்லோரும் எப்படி உள்ளேயே இருக்கமுடியும், மருத்துவமனையில் பேரனை சிகிச்சைக்கு சேர்க்க சென்றதால் தாமதம்.அதை ஏற்க வேண்டுமென கேட்க அதிகாரி மறுத்துள்ளார். இப்படி செய்தால் நாங்கள் எப்படி வாழ்வது என ரவி கேட்டுள்ளார். அதற்கு அதிகாரி “இதோ கரண்டு மரத்தில் ஏறி சாவு“ என கூறினார்.உடனே ரவி பக்கத்திலிருந்த மின்கம்பி மரத்தில் ஏறி உயர் அழுத்த மின் கம்பியை பிடித்து கருகி இறந்த காட்சி தமிழகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஈழத்தில் இன அழிப்புக்கு அஞ்சி தமிழகத்திற்கு பெருங்கடலை கடந்து சென்ற ரவிக்கு நேர்ந்த இந்தக் கதி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் இது முதல் நிகழ்வல்ல, இதற்கு முதலில் பல தற்கொலைகளும், கொலைகளும் கைவிடப்பட்டவர்களின் மரணங்களும் நடந்தேறியுள்ளன. தொப்புக்கொடி உறவு என நினைத்துக்கொண்டு அகதிகளாக அல்ல, பொச உறவுகளின் மண்ணுக்குச் செல்கிறோம் என்று தஞ்சம் புகுந்த மக்களுக்கு தமிழக அதிகாரிகள் இவ்வாறு அகதி உரிமையை கொடுக்கிறார்கள் என்பது பெரும் அதிர்ச்சிகரமானது.
ரவியின் மரணத்தின் பின்னர் அவரது உடலை கொடுக்க மறுத்தமை சம்பந்தப்பட்ட அதிகாரியை சிறைப்பிடித்த அகதிகள்மீது தடியடி நடத்தியமை என்றும் மிக மிக மிலேச்சனமான நடவடிக்கைகளும் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தில் உள்ள சுமார் முப்பதுக்கு மேற்பட்ட அகதிமுகாங்களில் ஒரு லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அடிப்படை வசதிகள் எதுவுமற்ற நிலையில் அந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
அகதிமுகாங்களில் இருப்பவர்கள் அங்கு கல்வி கற்றாலும் வெளியில் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் கல்வியைப் பெறுவதில் பெரும் சிரமங்கள் உள்ளன. அனுமதி மறுக்கப்படுவதுடன் உயர்கல்வியை கற்க முடியாத பொருளாதாரமற்ற நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். அத்துடன் கல்வி கற்றவர்களோ கூலித் டிதொழில் செய்பவர்களோ வெளியில் சென்று தொழிலையும் மேற்கொள்ள முடியாத நிலையும் காணப்படுகின்றது.
தற்கொலை செய்து கொண்ட ரவி வைத்தியசாலைக்குச் சென்று வந்துள்ளார். அவரது பெயரையே அதிகாரி பதிவு செய்ய மறுத்துள்ளார். வைத்தியசாலைக்குச் செல்வதைக்கூட தடுப்பவர்கள் எவ்வளவு மனித உரிமை மறுப்பாளர்கள்? ஈழத்தில் யுத்தம் முடிந்து ஆறு வருடங்கள் கடந்தும் இன்னமும் யுத்த காலத்தைப்போல தமிழகத்தில் அகதிகள் நடாத்தப்படுகின்றனர். இது மிக மிக வருத்தத்திற்குரியது.
ஈழ அகதிகளை தமிழக அதிகாரிகள் தொடர்ந்தும் சந்தேகக கண் கொண்டு பார்ப்பதுடன் சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கின்றனர். சிறைமுகாங்களில் விடுதலைப் புலிகள் என்று சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் பலர். ஸ்ரீலங்காவில் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது போல இந்திய அரசின் திட்டத்தில் தமிழகத்தில் ஈழத் தமிழ் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
பாரததேசத்தில் திபெத் அகதி வந்து வாழ்வதில் எந்த சிக்கலும் இல்லை. வங்காள அகதியும் பர்மா அகதியும்கூட வாழ்கிறார்கள். ஆனால் ஈழத் தமிழ் அகதிகளை மாத்திரம் அந்தியர்களைப்போல சிங்கள அரசைப் போல தமிழக அதிகாரிகள் கையாள்கின்றனர்.
இதெல்லாம் நன்கு திட்டமிட்டே நடத்தப்படுகிறது. தமிழக மக்களுக்கும் ஈழ மக்களுக்கும் இடையில் கசப்புக்களை ஏற்படுத்தி பிரிவுகளை உண்டாக்க இந்திய அரசு பல திட்டமிட்ட செயல்களை மேற்கொள்ளுகின்றது. அதன் ஒரு வெளிப்பாடே தமிழகத்தில் உள்ள அகதி முகாங்களும் அவற்றில் இடம்பெறும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான வெறுப்புக்களும்.
இந்த விடயத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் தமிழக முதல்வர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் ஈழத்துக்கம் தமிழகத்திற்குமான உறவு மற்றும் அரசியலை தீர்மானிக்கும் வலுக்கொண்டவை.
ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் அத்தனை தமிழக தலைவர்களும் புத்திசீவிகளும் படைப்பாளிகளும் கலைஞர்களும் இந்த அநீதியை கண்டிப்பதுடன் எதிர்வரும் காலத்தில் இப்படி நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக உறவுகளின் நெஞ்சில் ஈழத் தமிழர் குறித்திருக்கும் நெருக்கத்தை அகதிகள்மீது நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஈழத் தமிழர்களுக்கு தனி ஈழம் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரும் தமிழகம் இதை தடுத்தாக வேண்டும்.
தமிழ் ஈழ மக்களுக்காக ஸ்ரீலங்காமீது பொருளாதாரத் தடை கொண்டுவரவேண்டும் என்று கோரும் தமிழக முதலர்வர் இதனை தடுத்தாக வேண்டும். இதன் முழுப்பொறுப்பும் தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்.ஈழத் தமிழ் மக்களை இவ்வாறு நடாத்துவதும் அதற்காக ஈழத் தமிழ் அகதிகள் இத்தகைய முடிவுகளை எடுப்பதும் ஸ்ரீலங்கா அரசு தமிழக அரசை கைநீட்டி பேச ஒரு சந்தர்பத்தையே ஏற்படுத்தும்.
ஆசிரியர்,
செண்பகம்.
07.03.2016
