தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழகத்தில் இரட்டை அடுக்கு மேம்பாலம்!

hqdefault-1-1-450x338தமிழகத்தில் முதன்முறையாக நெடுஞ்சாலைதுறை சார்பில் இரட்டை அடுக்கு மேல்பாலம் ‘செக்மென்ட் டைப்’ முறையில் சேலத்தில் அமைக்கப்பட்டு வருகின்றது. போக்குவரத்து நெரிசலை குறைக்க 320 கோடி ரூபாய் செலவில் துவங்கப்பட்டுள்ள இந்த பால பணிகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் சேலம் 5வது இடத்தில் உள்ளது. 91.34 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட சேலத்தில் சாலை வசதிகள் இருந்தாலும், முறையாக திட்டமிடல் இல்லாததால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் பெரும் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், நெரிசலை குறைக்க சேலம் 5 ரோட்டில் மேம்பால பணிகள், 2 மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டன. நெடுஞ்சாலைத்துறை சார்பில் 320 கோடி ரூபாய் மதிப்பில் 5 ரோட்டில் இருந்து ஏ.வி.ஆர் ரவுண்டானா வரையிலும், 5 ரோட்டில் இருந்து குரங்குசாவடி வரையிலும் தூண்கள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனால் சாலைகளில் தடுப்பு அமைக்கப்பட்டு சாலையின் அகலம் குறைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.

பாலம் கட்டும் பணியை முடிக்க தனியார் நிறுவனத்துக்கு 39 மாதங்கள் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் காரணமாக, பேருந்து நிலையம் அருகே ஏற்படும் போக்குவரத்து நெரிச்சலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

சேலத்தில் 2 அடுக்கில் உருவாகும் இந்த பாலத்தில் ‘செக்மென்ட் டைப்’ பயன்படுத்தப்படுவதாகவும், தூண்கள் எழுப்பிய பின்னர் வேறு இடங்களில் தயாரிக்கப்படும் 2.5 மீட்டர் அகலமுள்ள கான்கிரீட் பீம்கள் கொண்டு வரப்பட்டு, கிரேன் மூலம் இணைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் மேம்பால கட்டுமான பணியின்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் தவிர்க்கப்படும் என்றும், மேம்பாலம் செயல்பாட்டுக்கு வந்துவிட்டால் சேலத்தில் நெரிசலின்றி பயணம் செய்யலாம் என்றும் கூறுகிறார் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர்.

மேம்பால பணிகள் முடிவடைந்தால் போக்குவரத்து நெரிசல் குறைந்து, சேலம் மாநகரம் விரைவான வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
Loading...