தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழகத்தில் நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் – ஜிகே வாசன்

தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழக முதலமைச்சர் நாளை டெல்லியில் பாரதப் பிரதமரை சந்திக்க இருக்கின்றார்கள். இந்த சந்திப்பின் மூலம் தமிழகத்தில் நிலுவையில் உள்ள பல்வேறுப் பிரச்சனைகளுக்கு நிரந்தர, சுமூகத் தீர்வு எட்டப்பட வேண்டும்.vasan

முதலமைச்சர் காவிரி பிரச்சனைத் தொடர்பாக பாரதப் பிரதமரிடம் முறையிடும் போது காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நதிநீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை உடனடியாக அமைத்து காவிரிப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்த வேண்டும். மேலும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் அனைத்து தரப்பு விவசாயிகள் வாங்கிய விவசாயக் கடனை மத்திய அரசு முழுமையாக தள்ளுபடி செய்திட வலியுறுத்த வேண்டும். மாணவர்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்திடவும், மேலும் கல்விக் கடனை வங்கிகள் சுலபமாக வழங்கிடவும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். மேலும் கர்நாடகம் மேகதாதுவில் தடுப்பணைக் கட்டும் முயற்சியையும் மத்திய அரசு தடுத்து நிறுத்த வற்புறுத்த வேண்டும்.

முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் வகையில் நியாயம் கிடைக்க வேண்டும். மேலும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலில் இருந்தும், கைது நடவடிக்கையில் இருந்தும் பாதுகாப்பதற்கும், கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை நிலைநாட்டும் வகையில் கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யவும் மத்திய அரசுக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும்.

Comments
Loading...