Designed by Iniyas LTD
தமிழகத்தில் ‘நீட்’க்கு எதிரான போராட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை!
நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் அரசியல் கட்சிகளோ, தனி நபர்களோ போராட்டம் நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
முன்னதாக நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என்றும் நீட் தேர்வு அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்க தமிழகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத காரணத்தினால் முனமுடைந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. ‛நீட்’ தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். அனிதா மரணத்திற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறி உயர்நீதிமன்றத்தில் ஜிஎஸ் மணி என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
இதில் ‛நீட்’ தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் அரசியல் கட்சிகள், தனிநபர்கள் போராடக்கூடாது. சாலை மறியல், கடையடைப்பு போராட்டம் நடத்தக்கூடாது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை அரசு பாதுகாக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் கொண்டு வரப்பட்ட ‛நீட்’ சட்டத்திற்கு எதிராக போராடக்கூடாது. ‛நீட்’ எதிராக போராட்டம் நடத்தவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்.
பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பிரச்னைகளை கையாள வேண்டும். தமிழகத்தில் ‛நீட்’ தேர்வுக்கு எதிரான எந்தவொரு போராட்டத்தையும் அனுமதிக்க முடியாது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.