Designed by Iniyas LTD
தமிழகத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள ஜெ
அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்–அமைச்சரும், அ.தி.மு.க.பொதுச்செயலாளருமான ஜெயலலிதா தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். நாளை (12–ந்தேதி) மாலை நெல்லை கோர்ட்டு எதிரே உள்ள பெல் பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் முதல்–அமைச்சர் கலந்து கொண்டு பிரசாரம் செய்கிறார்.
இதற்காக அவர் ஹெலிகாப்டர் மூலம் பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா கார் மூலம் பிரசார கூட்டம் நடைபெறும் மைதானத்திற்கு செல்கிறார். அங்கு நெல்லை, பாளையங்கோட்டை, ஆலங்குளம், அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், கன்னியாகுமரி, நாகர்கோவில், கிள்ளியூர், பத்மநாபபுரம், குளச்சல், விளவங்கோடு ஆகிய 20 தொகுதிகளின் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசுகிறார்.
பிரசார மேடை மைதானத்தை சுற்றிலும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிரமாண்ட உருவப்படங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மைதானத்துக்குள் நுழையும் பகுதியில் அலங்கார பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. பெண்கள் அமருவதற்கு வசதியாக தனியாக இடவசதிகள் செய்யப்பட்டு உள்ளது. பிரசார கூட்டத்தில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் தாகம் தீர்க்க 7 லட்சம் தண்ணீர் பாக்கெட்டுகள் விநியோகிக்கவும், 7 டேங்கர் லாரிகள் மூலம் குடி தண்ணீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரசார கூட்டம் நடக்கும் மைதானத்தில் 5 தீயணைப்பு படை வாகனங்கள், நெல்லை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த 10 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவர் குழுவோடு தயார் நிலையில் வைக்கப்படுகிறது.
பொதுமக்கள் வசதிக்காக 25 நகரும் கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை அருகில் பார்க்கும் ஆசையில் முன்னதாக மைதானத்திற்கு வரும் பொது மக்கள் காத்திருப்பதற்காக 15 ஆயிரம் பேர் அமரும் வகையில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. முதல்–அமைச்சர் ஜெயலலிதா வருகையையொட்டி நெல்லை, பாளையில் அ.தி.மு.க. கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். முதல்-அமைச்சர் பேசும் மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. பொதுக்கூட்டத்தில் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, சுகாதார வசதி, மருத்துவ வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளன. வாகனங்களை நிறுத்துவதற்கு தனி இடம் அமைக்கப்பட்டுள்ளது.