Designed by Iniyas LTD
தமிழகத்தில் பிறந்ததால் பிறப்புச்சான்றிதல் பெறுவதில் சிக்கல்! மாணவன் தற்கொலை முயற்சி
கிளிநொச்சியில் வசிக்கும் மாணவன் இந்திய நலன்புரி முகாமில் பிறந்து தாயகம் திரும்பிய நிலையில் பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கான சட்டச் சிக்கல் என கூறியதனால் மாணவன் தற்கொலைக்கு முயன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் செந்தமிழ்ச்செல்வன் – அன்புச்செல்வன் வயது 16 , என்னும் விசுவமடுவைச் சேர்ந்த மாணவனே இவ்வாறு நஞ்சருந்திய நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரிய வருவது ,
கிளிநொச்சியில் இருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியா சென்று வாழ்ந்த காலத்தில் 2000ம் ஆண்டில் பிறந்த குறித்த மாணவன் சகிதம் 2004ம் ஆண்டு ஏற்பட்ட சமாதான காலத்தில் நாடு திரும்பி விசுவமடுவில் வசிக்கும் மாணவன் இன்றுவரை பிறப்புச் சான்றிதழ் பெறுவதில் சட்டச் சிக்கலை எதிர் கொண்டுள்ளார்.
இவ்வாறு இந்திய நலன்புரி முகாமில் பிறந்து தாயகம் திரும்பிய நிலையில் பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கான சட்டச் சிக்கல் என கூறியதனால் மாணவன் கல்வி கற்பதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டது.
இருப்பினும் 2016ம் ஆண்டு க.பொ.த சாதாரணப் பரீட்சைக்கான அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கும் அதற்கான அடையாள அட்டையை பெறுவதற்கும் மாணவனிடம் பிறப்பு சான்றிதழ் கோரப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த சான்றிதழ் இல்லையென மாணவன் கூறியதனால் இதற்கான அனுமதிக்கு விண்ணப்பிப்பதில் உள்ள இடையூறுகளை கூறி பரீட்சையில் தோற்ற முடியாத சூழலே ஏற்பட்டுள்ளது. என தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டதன் காரணத்தினால் மேற்படி மாணவன் நேற்றைய தினம் வீட்டினில் இருந்த தந்தையார் தோட்டத்திற்குப் பயன்படுத்தும் கிருமி நாசினியை அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இருப்பினும் உடனடியாக வீட்டாரினால் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. –
இவ்வாறு இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பிய அகதிகளின் பிள்ளைகளிற்கான பிறப்பு பதிவு தொடர்பில் வட மாகாணப் பதிவாளர் நாயகம் பிரபாகரனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது ,
வெளிநாடுகளில் பிறக்கும் பிள்ளைகளிற்கான பிறப்பினை வெளிவிவகார அமைச்சின் ஊடகவே மேற்கொள்ள முடியும் . ஆனால் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து தாயகம் திரும்புகின்ற அகதிகளிற்கான பிறப்பு பதிவு மட்டும் பிறப்பு பதிய வேண்டியவர் இந்தியாவில் பிறக்கும்போது வழங்கிய ஆவணம் , மற்றும் அகதியாக தாயகம் திரும்பிய பதிவு என்பவற்றுடன் தாய் , தந்தை ஆகியோரின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் திருமணச் சான்றிதழ் என்பனவற்றை பிரதேச செயலகத்தில் சமர்ப்பிப்பதன் மூலம் பிறப்பினை பதிவு செய்து கொள்ள முடியும். என்றார்.