Designed by Iniyas LTD
தமிழகத்தில் மழை நீடிக்கும்: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை, மேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ளது. அதன் காரணமாக கடலோர மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் அநேக இடங்களிலும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனிடையே கடந்த சில நாட்களாக இலங்கை அருகே நீடித்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மறைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருவாரூர் மாவட்டம் குடவாசலில் 12 செ.மீ,விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 10 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.