Designed by Iniyas LTD
தமிழகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு நடத்தப்படவேண்டும் – ராஜேஷ் லக்கானி
சென்னையில் நிருபர்களுக்கு, ராஜேஷ் லக்கானி அளித்த பேட்டி வருமாறு:- தமிழகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு நடத்தப்படவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு சமீபகாலமாக விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
எங்கள் ஓட்டு விற்பனைக்கல்ல என்ற பிரசாரத்தை மேற்கொள்ளும்படி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி வலியுறுத்தியுள்ளார். ஏப்ரல் 14-ந் தேதியில் இருந்து அதை தொடங்குவோம். தொழில்நுட்ப விஷயங்களில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முன்னிலையில் உள்ளது. எனவே அதை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் ஆலோசித்தோம்.
தற்போது பேஸ்புக் நிறுவனத்துடன் இந்திய தேர்தல் ஆணையம் சமூகநோக்கத்துக்கான ஒரு ஒப்பந்தத்தை செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் வித்தியாசமானது. இதுகுறித்து பேஸ்புக் நிறுவனத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான பொதுக்கொள்கை இயக்குனர் ஆங்கி தாசுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அதன்படி, பேஸ்புக்கில் இணைந்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படவுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 5.79 கோடி வாக்காளர்களில் 1.80 லட்சம் பேர், அதாவது 31 சதவீத வாக்காளர்கள் பேஸ்புக் கணக்கில் உள்ளனர். எனவே மே 15, 16-ந்தேதிகளில் பேஸ்புக்கில் நுழைந்ததும் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்ற நினைவூட்டல் வாசகம் வரும்.
ஒரு ஒப்பந்தம் மூலம் 31 சதவீதவாக்காளர்களை தொடர்புகொள்ள முடியும் என்பது பெரிய விஷயமாகும். இந்த 2 நாட்களிலும் நமக்காக பேஸ்புக் இலவசமாக இந்த சேவையை செய்யவுள்ளது. பேஸ்புக்கில் தரப்படும் இணைப்பின் மூலம் தேர்தல் கமிஷனின் இணையதளத்தையும் பயன்படுத்த முடியும். இதுபோன்ற பத்திரிகையாளர் சந்திப்பு, தேர்தல் முடிவுகள் அறிவிப்பு ஆகியவற்றையும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய முடியும். அதுமட்டுமல்லாமல் தேர்தல் குறித்த போட்டிகள், விளம்பரங்கள், பிரபலமானவரின் பேச்சுகள் போன்றவற்றையும் காணமுடியும். பெயர் பதிவு, வாக்குப்பதிவு, நேர்மை ஆகிய மூன்றிலும் 100 சதவீதம் என்பதுதான் எங்கள் நோக்கம்.
சமூக வலைதளங்களில் வரும் தேர்தல் விளம்பரங்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். அதில் விளம்பரம் செய்யவேண்டும் என்றாலும் முன்அனுமதியும் சான்றும் பெற்றிருப்பது அவசியம். இதை கண்காணிப்பதற்கென்று தனி அமைப்பையும் உருவாக்கியிருக்கிறோம். தமிழகத்தில் சாலை ஓரங்கள், மக்கள் நடைபாதைகள் போன்ற இடங்களில் கட்சிகளின் பேனர், பிளக்ஸ் போர்டு, விளம்பரப் பலகைகளை வைக்கக்கூடாது என்று சமீபத்தில் ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதை அனைத்து அரசியல் கட்சிகளும் பின்பற்றவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். கட்சிகளின் பொதுக்கூட்டம் நடக்கும் மைதானங்களுக்குள் வேண்டுமானால் அவற்றையும் கொடிகளையும் வைத்துக்கொள்ளலாம்.
அரசியல் கட்சியினர் தங்கள் வாகனங்களில் கொடிகளை கட்டி செல்லக்கூடாது. இதை மோட்டார் வாகன சட்டம் வலியுறுத்துகிறது. வாகனத்தில் கொடிகட்ட வேண்டுமானால் ஆர்.டி.ஓ.வின் அனுமதி பெறவேண்டும். சட்டம் என்ன சொல்கிறதோ அதை அனைவரும் பின்பற்றினால் நல்லது. பறக்கும்படையில் மத்திய அரசு அலுவலர், மத்திய போலீஸ் படையினர் சேர்க்கப்படுவார்கள் என்று இந்திய தலைமைத் தேர்தல் கமிஷனர் ஏற்கனவே அறிவித்துள்ளார். தேர்தல் செலவைக் கண்காணிப்பதற்கு கூடுதல் பார்வையாளர் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியிருந்தார். அதன்படி, மாவட்டத்துக்கு இரு பார்வையாளர் என்ற நிலையில் இருந்து, தொகுதிக்கு ஒரு பார்வையாளர் என்று நியமிக்கப்படவுள்ளனர்.
முக்கியஸ்தர்கள் போட்டியிடும் தொகுதிகள், பதற்றத்துக்குரிய தொகுதிகளில் கூடுதல் எண்ணிக்கையில், அதாவது 3 முதல் 5 வரை கூடுதலாக பறக்கும் படைகள் அமர்த்தப்படும். 6.14 லட்சம் பேருக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்க தயாராக உள்ளது. இதற்காக விண்ணப்பித்த 20 ஆயிரம் விண்ணப்பங்கள் இன்னும் நிலுவையில் உள்ளன. விண்ணப்பித்த அனைவருக்கும் அடையாள அட்டை இந்த மாத இறுதிக்குள் வழங்கப்பட்டுவிடும். டி.வி.களில் தேர்தல் விளம்பரம் செய்வதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே அனுமதி பெற்றிருக்கவேண்டும். பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய இந்த முன்அனுமதி அவசியமில்லை. ஆனால் வாக்குப்பதிவு நாள் மற்றும் அதற்கு முந்தைய தேதிகளில் பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய வேண்டுமானால் அனுமதி பெற்றிருக்கவேண்டும். வாக்காளரின் பெயர், புகைப்படத்துடன் விளம்பரம் வெளியிடப்பட்டால் அதற்கான செலவு, அந்த வேட்பாளரின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆங்கி தாஸ் கூறியதாவது:-
இந்திய தேர்தல் கமிஷனுடன் இணைந்து செயல்படுவது எங்களுக்குக் கிடைத்துள்ள பெருமை. இதை சந்தோஷமாக உணர்கிறோம். வாக்குப்பதிவு செய்யுங்கள் என்ற நினைவூட்டல் வாசகங்களை அனுப்புவது மட்டுமல்லாமல், பல தகவல்களுடன் கூடிய இணைப்பையும் (லிங்க்) கொடுத்துக்கொண்டே இருப்போம். அதை வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதி பற்றிய விவரங்கள் போன்றவற்றை தெரிந்துகொள்ளலாம். கடந்த சில ஆண்டுகளில் வாக்காளர் பட்டியலில் 1.50 கோடி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதும், அதில் 1.40 கோடி பேர் 18 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும் ஆச்சரியமான விஷயம்.
தற்போதுள்ள இந்த ஒப்பந்தம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, 100 சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்கை தேர்தல் கமிஷன் எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த ஒப்பந்தம் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் நடக்கும் புதுச்சேரி, கேரளா மாநிலங்களிலும் இதுபற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பேஸ்புக் மற்றவர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் தளமாகத்தான் இருக்குமே தவிர, எங்கள் நிறுவனத்தின் எண்ணங்களை பிரதிபலிக்கும் நோக்கம் எங்களிடம் இல்லை. இவ்வாறு ஆங்கி தாஸ் கூறினார்.