தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு பிறகு மழை பெய்யும் – வானிலை மையம்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு பிறகு மழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.  தமிழகத்தில் கடந்த 8-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, நீலகிரி போன்ற மாவட்டங்களின் சில பகுதிகளை தவிர, பிற பகுதிகளில் இந்த மழை பெய்யவில்லை. இந்த பகுதிகளில் அவ்வப்போது இதமான வானிலை நிலவினாலும் பெரும்பாலும் கோடை காலம் போன்றே வெயில் வாட்டி எடுக்கிறது.vanilai

இந்த சூழல் மாறி விரைவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, அதாவது 3 நாட்களுக்குப்பின் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-   தமிழகத்தில் கடல் காற்று இல்லாததால் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மாலை நேரத்தில் மட்டும் அவ்வப்போது ஈரப்பதம் நிரம்பிய காற்று வீசுவதால் இரவு நேரங்களில் வெப்பம் தணிந்து காணப்படுகிறது.  எனினும் மேகக்கூட்டங்கள் தமிழகத்தை நோக்கி அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.

இந்த மேகக்கூட்டங்கள் அனைத்தும் ஒன்றுசேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு ஒன்று சேர்ந்தால் 3 நாட்களுக்கு பிறகு, அதாவது 23-ந் தேதிக்குப்பின் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும்.   இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைய வாய்ப்பு உள்ளது. இதைப்போல கிழக்கில் இருந்து வரும் காற்று தமிழகத்தில் வீசினாலும் வெப்பத்தின் வீரியம் குறையும். அதுவரை தற்போது இருப்பது போன்ற வெப்பச்சூழல் இருக்கும்.  இதற்கிடையே வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை மழைக்கான வாய்ப்பு இல்லை. அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. இந்த மழை அளவு வருமாறு:-  சின்னக்கல்லாறு, காங்கேயம், தஞ்சாவூர் தலா 8 செ.மீ., சமயபுரம், பட்டுக்கோட்டை, அரவக்குறிச்சி தலா 5 செ.மீ., துவாக்குடி, திருக்கோவிலூர், சேத்தியாதோப்பு தலா 4 செ.மீ., பெரியாறு, வாழப்பாடி, பரங்கிப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, புள்ளம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் தலா 3 செ.மீ., திருவையாறு, தாழவாடி, சீர்காழி, கிராண்ட் அணைக்கட்டு பகுதிகளில் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது.

இதைப்போல திருமானூர், அருப்புக்கோட்டை, கொடைக்கானல், விருத்தாசலம், ஆத்தூர், குழித்துறை, கடவூர், பெரம்பலூர், மன்னார்குடி, வால்பாறை, ஏற்காடு, தக்கலை, செட்டிக்குளம், கரம்பக்குடி, வல்லம், குளச்சல், கரூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட இடங்களில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments
Loading...