தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழகம் முழுவதும் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் 26 ஆயிரம் பேர் கைது

strike1மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் தொழிற்சங்கங்கள் நடத்திய போராட்டத்தில் 26 ஆயிரம் பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.   இப்போராட்டத்தில் சென்னையில் 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்த விவரம்:
தொழிலாளர் சட்ட சீர்திருத்தத்தை கைவிட வேண்டும், 7வது ஊதிய கமிஷன் பரிந்துரைப்படி குறைந்தபட்ச ஊதியம் ரூ. 18 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கக் கூடாது, குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும், வேலைவாய்ப்பை அதிகரிக்க உறுதியான நடவடிக்கை எடுக்கக் வேண்டும், பொது விநியோக முறையை வலுப்படுத்தி அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 10 தொழிற்சங்கங்கள் செப்டம்பர் 2-ஆம் தேதியில வேலை நிறுத்தப்போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தன. இந்த போராட்டத்துக்கு பொதுத்துறை வங்கிகளின் தொழிற்சங்கங்களும் பங்கேற்பதாக அறிவித்தன.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை தொழிற்சங்கங்கள் கைவிட வைப்பதற்காக, மத்திய அரசு சார்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஆனால் பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்படவில்லை. எனவே திட்டமிட்டப்படி வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்.
அதன்படி தமிழகத்தில் வேலை நிறுத்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தையொட்டி, பொதுமக்களுக்கு பால்,மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதில் பிரச்னை ஏற்படக் கூடாது என்பதற்காக தமிழக காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. முக்கியமாக அரசு பேருந்து பணிமனைகள், ஆவின் பால் மையங்கள், ஆவின் நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் வியாழக்கிழமை மாலை முதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. அதேபோல பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றிலும் போலீஸôர் அதிகளவில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் வெள்ளிக்கிழமை அரசு பேருந்துகள், ரயில்கள் வழக்கம்போல இயங்கின. தொழிற்சங்கத்தினர் சில இடங்களில் நடத்திய போராட்டத்தின் காரணமாக, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
26 ஆயிரம் பேர் கைது:
சென்னையில் தொழிற்சங்கத்தினர், திருவொற்றியூர் தேரடி வீதி,அண்ணா சாலை பல்லவன் சாலை சந்திப்பு, செங்குன்றம் திருவள்ளூர் கூட் சாலை,புரசைவாக்கம் நெடுஞ்சாலை,திருநின்றவூர் சி.டி.எச். சாலை,அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆகிய 6 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கிண்டி ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
அண்ணா சாலை,பல்லவன் சாலை சந்திப்பில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தினால் அண்ணா சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல கிண்டியில் மின்சார ரயில் முன் நடைபெற்ற மறியல் போராட்டத்தினால், சிறிது நேரம் மின்சார ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது. இது தவிர்த்து 9 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேபோல மாநிலம் முழுவதும் 13  இடங்களில் ரயில் போராட்டம் நடைபெற்றது. இது தவிர்த்து சாலை மறியல் போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டம், முற்றுகையிடும் போராட்டம் ஆகியவை நடைபெற்றன. அனுமதியின்றி நடைபெற்ற இப் போராட்டங்களில் பங்கேற்ற 26 ஆயிரம் பேரை போலீஸôர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் அந்தப் பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள், சமூக நலக் கூடங்கள், மைதானங்கள் ஆகியவற்றில் வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். தொழிற்சங்கங்களின் இந்த போராட்டதின் காரணமாக மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.

Comments
Loading...