Designed by Iniyas LTD
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது
தமிழ்நாட்டுக்கு அதிக பயன் அளிக்கும் வட கிழக்கு பருவமழை கடந்த 18–ந் தேதி தொடங்கியது. கடந்த 3 நாட்களாக பெய்து வரும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. புதுச்சேரியிலும் நல்ல மழை பெய்துள்ளது.
நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், சென்னை, கடலூர் மற்றும் கடலோர மாவட்டங்களிலும் பலத்த, மிக பலத்த மழை பெய்து வருகிறது. கோவை, சேலம், திருப்பூர் ஆகிய மேற்கு மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் மழை பெய்து இருக்கிறது.
தென்மேற்கு வங்க கடலில் இலங்கைக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே காற்றழுத்த தாழ்வு நிலை இன்றும் தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. இதன் காரணமாக மேலும் 2 நாட்கள் தமிழ்நாடு, புதுச்சேரியில் மழை நீடிக்கும்.
தற்போதைய நிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:–
கடந்த சில நாட்களாக தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, இன்று காலை 8.30 மணி நிலவரப்படி இலங்கைக்கும் தமிழக கடலோர பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் இடையில் நிலை கொண்டுள்ளது.
இது மேற்கு நோக்கி நகர்ந்து வருவதால் அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும். எப்போதெல்லாம் மன்னார் வளைகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டிருக்குமோ அப்போதெல்லாம் தமிழகம், புதுச்சேரியில் நல்ல மழை பெய்யும்.
அது போன்று தற்போதும் காற்றழுத்த தாழ்வு நிலை மன்னார்வளைகுடா பகுதியில் நிலைகொண்டுள்ளதால் பலத்த மழை பெய்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்யும். ஒரு சில இடங்களில் மிக பலத்த மழை பெய்யும்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். விட்டு விட்டு மழை பெய்யும். சில பகுதிகளில் மிக பலத்த மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து வருவதால் படிப்படியாக மழை குறையும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குலசேகரபட்டினத்தில் 17 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மண்டபம் 13 செ.மீ., குடவாசல் 12 செ.மீ., மயிலாடுதுறை, கொள்ளிடம், திருச்செந்தூர், சீர்காழி, கடலூர், பாம்பன், தலைஞாயிறு, காட்டுமன்னார்கோவில் ஆகிய இடங்களில் தலா 11 செ.மீ. மழை பெய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, திருப்பூர், ஈரோடு, தஞ்சை, நாகை, கடலூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
மழை காரணமாக சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சை, நாகை மாவட்டங்களில் நஞ்சை பயிர்கள் பாதிப்பு அடைந்துள்ளது.
சென்னை நகரில் மழை காரணமாக பெரும்பாலான சாலைகள் சேதம் அடைந்துள்ளன. குடிசை பகுதிகளிலும், தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை பெய்யும் போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று இரவு 4 செ.மீ மழையும், மீனம்பாக்கத்தில் 3 செ.மீ மழையும் பதிவாகியது. இன்று காலையும் மழை பெய்தது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர் 14 மில்லி மீட்டர், செங்கல்பட்டு 6 மி.மீ, ஸ்ரீபெரும்புதூர் 19 மி.மீ, தாம்பரம் 34 மி.மீ, மதுராந்தகம் 9 மி.மீ, செய்யூர், திருக்கழுக்குன்றம் தலா 18 மி.மீ, மாமல்லபுரம் 52 மி.மீ மழை பெய்துள்ளது. மழை காரணமாக பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி அதிக பட்சமாக 91 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. புழல் 91 மி.மீ, பொன்னேரி 4 மி.மீ, ஊத்துக்கோட்டை 24 மி.மீ, கும்மிடிப்பூண்டி 20 மி.மீ, திருவள்ளூர் 29 மி.மீ, பூந்தமல்லி 55 மி.மீ, அம்பத்தூர் 28 மி.மீ, பூண்டி, செம்பரம்பாக்கம் தலா 27 மி.மீ, தாமரைப்பாக்கம் 47 மி.மீ மழை பதிவாகி இருக்கிறது. திருவாரூரில் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. சாலைகள் பாதிப்படைந்துள்ளன.
தீபாவளிக்கு சூடு பிடிக்கும் பட்டாசு, ஜவுளி, இனிப்பு விற்பனை கடந்த 3 நாட்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக மந்தமாக நடந்து வருகிறது.
போக்குவரத்து நெரிசல் காரணமாக சென்னையிலும் தீபாவளி பொருட்களை வாங்கச் செல்வோர் கூட்டம் மிக குறைவாகவே உள்ளது. பட்டாசு, இனிப்புகளின் விற்பனையும் எதிர்பார்த்த அளவு இல்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.