Designed by Iniyas LTD
தமிழக மீனவர்களை கைது செய்ய ஆரம்பித்துள்ள சிறிலங்கா கடற்படை
ராமேசுவரம் மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் குட்டி ரோந்து கப்பல்களில் வந்து, அவர்களை தாக்கி பின்னர் 4 பேரை சிறை பிடித்தனர்.ராமேசுவரத்தில் இருந்து நேற்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அவர்களை நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, அங்கு இலங்கை கடற்படையினர் குட்டி ரோந்து கப்பல்களில் வந்தனர். அவர்கள் மீனவர்களை பார்த்து இங்கு எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பது ஏன் என கேள்வி எழுப்பினர். உடனடியாக இங்கிருந்து செல்லுங்கள் என எச்சரிக்கையும் விடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் அங்கிருந்து அவசரமாக புறப்பட்டனர். அப்போது ஒரு சில படகுகளுக்குள் இறங்கிய இலங்கை கடற்படையினர், மீனவர்களை தாக்கியதோடு மீன்பிடி சாதனங்கள் மற்றும் வலைகளை சேதப்படுத்தியதாக இன்று காலை கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் ராமேசுவரத்தை சேர்ந்த பாஸ்கரன் என்பவரது படகில் சென்ற முருகையா உள்பட 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுவிட்டனர். அவர்களை நெருந்தீவு, துறைமுகத்திற்கு கொண்டு சென்று, இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. 45 நாட்கள் தடைகாலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற முதல் நாளில் 7 மீனவர்கள் தற்போது 4 மீனவர்கள் என சிறைபிடிப்பு சம்பவம் தொடர்வதால் ராமேசுவரம் மீனவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.