Designed by Iniyas LTD
*தமிழனென்ற மனச்சாட்சி*
இன்றைக்கு இதேநேரம்
எட்டாண்டுகள் முன்பதாய்
யார்க்குமே தெரிந்திருக்கவில்லை நாளையென்ற விடிபொழுது விடியாமலே ஆண்டுகள் கடந்தும்
இருண்டுகிடக்கப் போகிறது எம்தேசமென்று…
ஊர் முழுக்க எரித்தபடி ஏப்பமிட்ட வஞ்சகத்தின் போரரக்கன் கோரப்பசிக்குப் பிஞ்சுகள் பெண்டிரென்றெந்தப் பேதமிலாதபடி தின்று தீர்த்துத் தீக்கிரையாய்ப்போகும் நெஞ்சுவெடிக்கும் சேதியெலாம் காதினோரம் இடியாய்க் கேட்குமென
கனவில்கூட நினைத்துப்பார்த்தாயா!
அன்பை விதைத்த அன்னை அடுத்தகணம் பிணமாக ,அப்பா என்றழைத்த உயிர் தந்த விருட்சம் அரவமற்ற உடலாக, அன்புதந்து அரவணைத்த, துடிதுடித்து ஓலமிட்டு செத்துப்போகும் உயிரையெலாம், இழுத்துப் புதைக்க நேரமின்றி, அடுத்த வேளைக்குணவின்றி, நீரின்றி,
உடுக்கத் துணியின்றி தவித்துப்போன நாட்கள் கடந்து எட்டு ஆண்டுகள் காற்றிலே போனதே!
இன்றுவரையில் எமக்கு மிச்சம் வெற்று ஒப்பாரி, வேறுபட்டு நின்றபடி திட்டுத்திட்டாய்க் கூட்டம் , ஆளாளுக்குக் கங்கணம் கட்டியபடி ஒவ்வொரு கொள்கை…
அதற்கென்றே உருவாக்கிய சங்கம்,
அடுத்தவர்மேல் பழிசொல்லும்
மேலாண்மைவாதம், அனைத்தும் உன்னை மென்மேலும் தின்று புதைக்குதடா…
இதற்காகத்தான் இத்தனை காதை தூரம் வற்றிப்போன உயிர்சுமந்து செத்துப் பிழைத்தபடி உன்தேசம் தொலைத்துவிட்டு, சோகங்கள் சுமந்தபடி தெருவோரம் வந்தாயா?
இந்த வெட்கமும் வேதனையும் குத்திக்கிழித்தபடி, குதர்க்கங்களோடு போராடி எட்டு வருடம் கடந்தும்,
எதனையும் நீ எட்டாதபடி, எப்படி ஒரு கணமாகிப் போனதே என நினைத்து வெட்கித்துப்பார்த்தாயா!
‘வெல்லப்போகிறோம் எங்களை நாங்களே எப்போதென்று’ நின்று நிதானிக்க நேரமிலாதபடி நீ எங்கே ஓடிக்கொண்டிருக்கிறாய்?
உன்னையே கூறுபோடும்
வெற்று வார்த்தைகள் உன் இலட்சியத்திற்கீடாகா…
உன்னைப்போல் உன்னோடு தோள்சேர,உயிர்கொண்ட லட்சியத்தை உன்னோடு ஈடேற்ற…
உயிரும் சதையுமாய் இன்னொரு தமிழன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறான்… அவனையும் அரவணைத்தபடி இன்றைய திகதியில் உறிதி எடுத்துக்கொள்…!
உனக்காக இவ்வுலகில் நீதான் இன்னமும் உயிரோடு இருக்கிறாய்…!
*போராடு…..*
-காந்தள்-
18/05/2017
