Designed by Iniyas LTD
தமிழரசு கட்சி வேட்பாளர்கள் நவக்கிரகங்கள் போல ஒவ்வொரு மூலையில் நிக்கின்றனர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு
தமிழரசுக் கட்சிக்குள் ஒருமித்த கொள்கையோ ஒருமித்த கருத்தோ இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் முகங்கொடுத்து பேச முடியாதவர்களாக முரண்பட்ட நிலையில் குழப்பங்களுடன் சிதறுப்பட்ட நிலையில் தான் அந்தக் கட்சியினர் இருக்கின்றனர்.
அந்தக் கட்சியில் இருக்கக் கூடிய சகல வேட்பாளர்களும் நவக்கிரகங்கள் போல ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலைகளுக்குள் நிற்கின்ற நிலை தான் உள்ளது.
இன்னும் சொல்லப் போனால் பல பேருடைய நாக்கில் சனி துள்ளி விளையாடுகின்றது.
இவ்வாறு தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இன்றைக்கு இருக்கக் கூடிய ஒரே தெரிவாக ஒருமித்துச் செயற்படுகின்ற தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியே இருப்பதாகவும் அதற்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டுமென்றும் அவர் கோரியுள்ளார்.
இந்த நேரத்தில் தமிழ் மக்களுக்கு இருக்கக் கூடிய ஒரே ஒரு தெரிவாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி இருக்கின்றது.
குறைந்த பட்சம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிய அனைவரையும் ஒன்றுபடுத்தி நாங்கள் ஒரு கூட்டணியை உருவாக்கியிருக்கின்றோம்.
இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இணைய வேண்டும் என்பதற்காக மிக நீண்ட காலம் முயற்சி செய்தோம்.
குறிப்பாக சுமார் ஒன்றரை வருடங்களாக முயற்சி செய்து உள்நாட்டிலும் புலம் பெயர் தேசங்களிலிருந்தும் பல பேர் அவர்களுடன் பேசினார்கள்.
ஆனால் அவர்கள் அதற்கு ஒத்து வரவில்லை என்பது தான் யதார்த்தம். என்றார்.