Designed by Iniyas LTD
தமிழர் தாயகத்தில் ஸ்ரீலங்கா அரசின் கைதுகள்! – பின்னணி என்ன?
சிங்கள அரசு நினைத்தால் தமிழ் ஈழத்தில் எதைவேண்டுமானாலும் செய்யும் என்பதை தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள கைதுகள் உணர்த்துகின்றன. 2009உடன் போர் முடிந்துவிட்டதாக ஸ்ரீலங்கா அரசு அறிவித்தது. ஆனால் 2009இற்குப் பின்னர் ஸ்ரீலங்கா அரசு நினைக்கும்போதேல்லாம் வடகிழக்கு பதற்றப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஒரு போர் சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டில் மகிந்த அரசு யாழில் இனந்தெரியாதவர்கள் என்ற போர்வையில் சுட்டுப் பலியெடுத்ததை எவரலாறும் மறந்துவிடமுடியாது.
அதைப்போலவே 2012இல் கிறிஸ்பூதம் என்ற பெயரில் இராணுவத்தினரை பூதமாக்கி தமிழர் மண்ணில் இறக்கி அநியாயம் செய்யப்பட்டது. இதைச் செய்தவர் கோத்தபாய ராஜபக்ச. இதன் பின்னர் மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சியில்(?) இந்த ஆண்டு மே மாதம் பதற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டது. தற்போது தாயகத்தில் மேற்கொள்ளப்படும் காரணமற்ற கைதுகள் தமிழ் மக்களை அச்சமான சூழ்நிலைக்குள் தள்ளியுள்ளது. அலெக்ஸ் அரவிந்த் என்ற இளைஞர் சிங்களப் படைத் தரப்பால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் ஒரு சமூகச் செயற்பாட்டாளர் என்று கூறப்படுகிறது.
அண்மையில் இடம்பெற்ற எழுக தமிழ் நிகழ்விற்கான ஏற்பாடுகளை இவர் மேற்கொண்டார் என்றும் கூறப்படுகிறது. இதேவேளை இவர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்தவர் என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியை பிரச்சினைக்குரிய கட்சியாக காட்டவே இவரை கைது செய்திருப்பதாகவும் அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.
ஆவா குழுவுடன் தொடர்பு என்ற பெயரிலேயே அலெக்ஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் ஆவா குழு என்பது ஸ்ரீலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவினால் இராணுவத்தினரை வைத்து உருவாக்கப்பட்டது என்பதை அரச தரப்பு பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார். உண்மையில் ஆவாக குழு என்பது இராணுவத்தின் குழந்தையே. ஆ- ஆமி, வா- வாள், இதுவே ஆவா குழு என்று சமூக வலைத்தளங்களில் நையாண்டிகள் பரவலாகியுள்ளன.
கடந்த மாதம் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்தை ஒட்டினார் என்ற பெயரில் ஜெர்மனிய பிராஜாவுரிமை பெற்ற ஈழப் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். அத்துடன் அவர் பலவந்தமாக நாட்டை விட்டும் வெளியேற்றப்பட்டார். அத்துடன் நேற்று முந்தினம் யாழ் பண்டத்தரிப்பை சேர்ந்த இரவிச்சந்திரன் நிதுசன் என்ற இளைஞர் ஆவா குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கைதுகள் தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
மே மாத்திலும் நவம்பர் மாத்திலும் சிங்கள அரசுக்கு காய்ச்சல் வருவது வழமை. மே மாத்தில் இனப்படுகொலையை நினைவுகூர்வதை தடுப்பதும் நவம்பர் மாத்தில் மாவீரர்களை நினைவுகூர்வதை தடுப்பதுமே சிங்கள அரசின் நோக்கம். இதற்காகவே தற்போது கைதுகள் இடம்பெறுகின்றன. ஆட்சிகள் மாறினாலும் அணுகுமுறைகள் மாறவில்லை என்பதை சிங்கள அரசு மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றது. மகிந்த எவ்வாறு மே மாத்திலும் நவம்பர் மாத்திலும் காய்ச்சலில் தவித்தாரே அப்படியே மைத்திரியும் தவிக்கிறார்.
ஸ்ரீலங்கா அரசு தமிழ் மக்களை எந்தக் காரணத்தையும் கூறி கைது செய்யும் என்பதையும் இது எப்போதும் நடக்கும் என்பதையுமே இந்த நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டு வரும் அரசு தமிழ் மக்களை என்றைக்கும் பயங்கரவாதிகள் என்ற பெயரில் கைதுசெய்து சிறைகளில் தள்ளி ஒடுக்கும் என்பதையே இந்த நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன. தமிழர்களுக்கு தமிழீழம் ஒன்றே தீர்வு என்பதை மீண்டும் மீண்டும் உணர்த்துவது சிங்கள அரசுதான்.
தமிழவன்,
செண்பகம்.
11.11.2016
