Designed by Iniyas LTD
தமிழீழ தலைநகரில் கடற்படைத் தளம் ஒன்றை நிறுவ பிரிட்டன் உத்தேசம்..
பிரிட்டன் திருகோணமலையில் கடற்படைத் தளம் ஒன்றை நிறுவ உத்தேசிப்பதாகத் அறியக்கிடைத்துள்ளது..
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகியபிறகு ( பிரெக்சிட் )தெற்காசியாவில் இராணுவத் தளங்களை அமைப்பதற்கான பேரார்வமிக்க திட்டத்தின் ஒரு பகுதியாக பிரிட்டன் இதனை முன்னெடுக்க உள்ளதாகவும் , குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகளாவிய விவகாரங்களில் வல்லாதிக்க அந்தஸ்தை மீளப்பெறும் முகமாக தெற்காசியாவிலும் கரிபியன் பிராந்தியத்திலும் பிரிட்டன் இராணுவப் பிரசன்னத்தை அதிகரிக்க விரும்புகிறது.
அந்த வகையில் தெற்காசியாவில் இராணுவத்தளங்களைத் திறக்கும் திட்டம் குறித்து பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஜெரமி ஹன்ற் சூசகமாகத் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இதற்கு சாத்தியமான நாடுகளாக இலங்கை, மாலைதீவு அல்லது சிங்கப்பூர் அமையக்கூடும் என்றும் தகவலல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை பிரெக்சிட்டுக்குப் பிறகு திருகோணமலையில் பிரிட்டன் இராணுவத்தளம் ஒன்றை அமைப்பதற்கு முன்னெடுக்கக்கூடிய முயற்சிகளை பிராந்திய வல்லரசான இந்தியா வரவேற்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையைப் பொறுத்தவரை, திருகோணமலைத் துறைமுகத்திற்குள் பிரிட்டன் வருமாக இருந்தால் அது இலாபகரமான ஒரு திட்டமாக அமையக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.
இந்நிலையில் திருகோணமலை துறைமுகத்தின் கேந்திரமுக்கியத்துவம் காரணமாக எழக்கூடிய அசௌகரியமான சூழ்நிலையையும் தவிர்க்க இது வாய்ப்பாக இருக்கும் என அவதானிகளின் அபிப்பிராயமாக இருக்கிறதுகூறியுள்ளனர்.
இது தொடர்பில் ஐக்கிய இராச்சியத்தின் ரெலிகிராஃப் பத்திரிகையில் பாதுகாப்பு இணையமைச்சர் கவின் வில்லியம்சன் தெரிவித்த தகவலை வெளியுறவு அமைச்சர் ஹன்ரும் ஊர்ஜிதம் செய்துள்ளார்.
குறித்த விடய்ம் தொடர்பில் கொழும்பில் உள்ள பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகரகத்தின் பேச்சாளர் ஒருவரிடம் கேட்டபோது,
பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக்கொள்கை விவகாரங்களில் உலகளாவிய பங்கை பிரிட்டன் வகிக்கிறது.தொடர்ந்தும் வகிக்கும். எனினும் இலங்கையில் இராணுவத்தளம் அமைக்கும் ஏற்பாடுகள் தொடர்பில் எம்மிடம் தற்போது திட்டம் எதுவும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில் பிரெக்சிட் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரதமர் தெரேசா மேயின் அரசாங்கம் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டிருக்கின்றமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

