தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் தொடர் ரெயில் மறியல் போராட்டம்

காவிரி நதிநீர் பிரச்சினைக்காக வருகிற 17, 18-ந்தேதிகளில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் தொடர் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இதற்கு ஆதரவு கேட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் சு.திருநாவுக்கரசரை, அவரது இல்லத்தில் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க குழு தலைவர் தெய்வசிகாமணி சந்தித்து பேசினார்.  cauvery-issue

அதைத் தொடர்ந்து சு.திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-  தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் தலைவர் தெய்வ சிகாமணி என்னை சந்தித்து, 17, 18-ந்தேதிகளில் நடைபெற உள்ள தொடர் ரெயில் மறியல் உள்ளிட்ட அறப்போராட்டத்துக்கு ஆதரவு கேட்டுள்ளார். தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி காங்கிரஸ் கட்சி இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.  திருச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 15-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. இதில், எனது தலைமையில், ப.சிதம்பரம், முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும், அதன் உத்தரவை ஏற்று கர்நாடகம் செயல்படாதது உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். தமிழகத்தில் உள்ள 50 எம்.பி.க்கள் ஒன்று சேர்ந்து பிரதமர் மோடியை சந்திக்க சென்ற போது, உதவியாளரை வைத்து மனுவை பெற்றுக் கொண்டது, தமிழக மக்கள், விவசாயிகள் நலனுக்கு புறம்பானது.  முதல்-அமைச்சரின் உடல்நிலை தேறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரை ராகுல் காந்தி சந்தித்து விசாரித்தது உடல் நலம் பாதிக்கப்பட்ட சந்திப்பு தான். அதில் எந்த அரசியலும் கிடையாது.  துணை முதல்-அமைச்சர் வேண்டுமா? வேண்டாமா? அந்த கட்சிக்குள் ஏதாவது மாற்றம் தேவையா? அ.தி.மு.க. ஆட்சிக்குள் மாற்றம் தேவையா என்பதெல்லாம் அ.தி.மு.க. கட்சியும், கட்சியின் தலைவர், பொதுச் செயலாளரோ, மூத்த தலைவர்களோ, அந்த கட்சிக்காரர்களோ எடுக்க வேண்டிய முடிவு அது. அதற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நான் ஆலோசனை சொல்ல விரும்பவில்லை.

மற்ற தலைவர்கள் சொல்வது அவர்களது உரிமை.  ஆளும் கட்சி சார்பில், அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படவில்லை. அதனால், தி.மு.க. சார்பில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டுவோம், டெல்லிக்கு போவோம் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அப்படி அனைத்து கட்சி கூட்டம் நடத்தினால், அதில் காங்கிரஸ் கண்டிப்பாக பங்கேற்கும். காங்கிரஸ் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். டெல்லிக்கு அனைத்து கட்சி குழு போனால், அதில் காங்கிரசும் போகும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Comments
Loading...