Designed by Iniyas LTD
தமிழ்நாட்டில் நூலகங்கள் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
இந்தியாவில் நூலகத் துறையில் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாட்டில், கடந்த சில ஆண்டுகளாக நூலகங்கள் மிக மோசமான நிலையை அடைந்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையில், தமிழ்நாட்டில் இருக்கும் 4,000க்கும் மேற்பட்ட கிளை நூலங்கள், அடிப்படை வசதிகள் எதுவுமின்றி பெயரளவுக்கே செயல்பட்டுவருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
அதேபோல, சென்னை மாவட்ட தலைமை நூலகமான தேவநேயப் பாவாணர் நூலகத்தில் 60 லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட அரங்கம், எந்த நிகழ்ச்சியும் நடத்துவதற்கு அனுமதியளிக்கப்படாமல் பூட்டிவைக்கப்பட்டிருப்பதாகவும் இளங்கோவன் கூறியுள்ளார்.
பொதுநூலகத் துறையில் ஆயிரக்கணக்கான நூலகர் பதவிகள் காலியாக வைக்கப்பட்டிருப்பதாகவும், கிராமப்புற நூலகங்களில் வெறும் 20 ரூபாய் சம்பளத்தில் ஆட்களை வைத்து நூலகங்களை நிர்வகிப்பதாகவும் தமிழக அரசு மீது இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையிலிருக்கும் தேசிய நூலகங்களில் ஒன்றான கன்னிமாரா பொது நூலகத்தில் 150 பேர் பணியாற்றுவதற்குப் பதிலாக வெறும் 22 பேர் மட்டுமே பணியாற்றிவருவதாகவும் இளங்கோவன் கூறியுள்ளார். நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதில் இமாலய ஊழல் நடைபெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.