தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழ்மக்களின் காணிகளை முஸ்லிம்கள் கபளீகரம் செய்வதாக கவனஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

mada

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட ஐயங்கேணி, பாரதி கிராமம், மணிபுரம் கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களது காணிகளை முஸ்லிம்கள் சிலர் அத்துமீறி கபளீகரம் செய்வதாக கூறி கவனஈர்ப்பு போராட்டம் நடத்தியுள்ளனர்.

செங்கலடி ஐயங்கேணி நரசிங்க வைரவர் ஆலயத்திற்கு முன்பாக நேற்று காலை 10 மணியளவில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் அத்துமீறிய காணி அபகரிப்புக்கள் நிறுத்த வேண்டும், முஸ்லிம் கிராம சேவகரை மாற்றி தமிழ் கிராம சேவையாளர் ஒருவரை நியமிக்க வேண்டும், ஐயன்கேணி பகுதியில் புதிய முஸ்லிம் கிராமங்களை உருவாக்குவதை நிறுத்த வேண்டும் போன்ற மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து ஐயன்கேணி மக்கள் கவனஈர்ப்பு போராட்டம் நடத்தியுள்ளனர்

இவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், பிரசன்னா இந்திரகுமார், செங்கலடி வர்த்தக சங்கத் தலைவர் எஸ்.மோகன் மற்றும் பிரதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட ஐநூறுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர், உ.உதயசிறிதரிடம், மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. ஐயங்கேணி பொதுமக்களால் “எங்களது கிராமங்களை கபளீகரம் செய்யாதீர்கள்” என்ற தலைப்பில் துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டது.

அந்த துண்டுப்பிரசுரத்தில் இன்று எமது ஐயன்கேணி கிராமத்தை சுற்றி வளைத்து முஸ்லிம்கள் சிலர் முஸ்லிம் அமைச்சர்களின் உதவிகளுடன் எமது பூர்வீக வாழ்விடங்களை ஊடறுத்து காணிகளை பிடித்து எமது கிராமங்களை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக் கொண்டிருக்கின்றனர்.

எமது இந்து மதஸ்தலங்கள், இந்து மயானம் உள்ளிட்ட தமிழ் மக்களது கலாசார ரீதியான அடையாங்களை ஊடறுத்து காணிகளை கபளீகரம் செய்துள்ளதுடன், புதிய குடியேற்றத் திட்டங்களை உருவாக்கி புதிய முஸ்லிம் கிராமங்களையும் அமைத்துள்ளனர்.

மேற்படி நடவடிக்கையானது எமக்கு ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்கால சந்ததியினரின் கலாசார ரீதியான வாழ்வியலையும் கேள்விக் குறியாக்கியுள்ளது. அத்தோடு இரண்டு முரண்பட்ட மத, இன, கலாசார அடையாளங்களை கொண்ட மக்களில் ஒரு இனத்தின் மத, இன, கலாசார அடையாளங்களை அழிக்க முற்படும் இது போன்ற செயற்பாடுகள் எதிர்காலத்தில் தமிழ் முஸ்லிம் இன நல்லுறவில் பாதிப்பையும், பகமையையும் உண்டாக்க கூடும்.

எனவே மேற்படி வியடங்களை கருத்தில் கொண்டு எமது கிரமங்களை ஊடறுத்து முஸ்லிம் தலைமைகளினால் முன்னெடுக்கப்பட்டு வரும் காணி அபகரிப்பு மற்றும் தமிழர்களின் கலாச்சார அடையாளங்கள் மீதான ஆக்கிரமிப்பு மற்றும் திட்டமிட்ட முறையில் சட்ட ஆவணங்களையும், பொருளாதாரத்தையும் பயன்படுத்தி எமது கிராமங்களை சுற்றி வளைத்து மேற்கொள்ளப்படும் குடியேற்றத் திட்டங்களையும் உடன் நிறுத்துமாறு இதனூடாக வேண்டுகோள் விடுக்கின்றோம் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

Comments
Loading...