தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழ் அரசியல் கைதிகள் தங்களை விடுவிக்க கோரி சிறையில் உண்ணாவிரதம்

prisonersசிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள தங்களை நல்லாட்சி அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் இன்று முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கின்றனர்.

இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் எந்தவித விசாரணையுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தங்களுக்குப் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யக் கோரியே இந்தப் போராட்டத்தை ஆரம்பிக்கின்றனர்.

இந்தப் போராட்டம் தொடர்பாக தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் அறிக்கையொன்றையும் விடுத்துள்ளனர். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவை,

கொழும்பு, மகசின், பூசா, அநுராதபுரம், தும்பறை,நீர்கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய சிறைகளில் பல வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தங்கள் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கின்றனர். சுமார் 250 கைதிகளுக்கு மேல் சாவா? வாழ்வா? என்னும் போராட்டத்தில் இறங்கவுள்ளனர். போர் முடிவடைந்து 6  வருடங்கள் நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில், தற்போது நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலம் எனக் கூறிக்கொண்டிருக்கும் அரசானது செய்ய வேண்டிய நல்லிணக்க வேலைகளில் ஒன்றான அரசியல் கைதிகள் விடயத்தில் பாராமுகமாக இருந்த காரணத்தினாலேயே கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அரசாலே தள்ளப்பட்டுள்ளார்கள்.

பல தடவைகள் அதிகாரத்தில் இருக்கும் அதிகாரிகளுக்கும், ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி பல மனித உரிமை அமைப்பினரும் மற்றும் சமய குருமார்களும் கடிதங்கள் அனுப்பி இருந்தார்கள்.

அரசியல்வாதிகளான எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உட்பட பலரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட அதிகாரத்தில் இருக்கும் அதிகாரிகளை நேரில் சந்தித்தும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திக் கூறியிருந்தார்கள். அத்தோடு மன்னார் ஆயர் இராயப்பு யோசப்பும் மைத்திரிபால சிறிசேன ஐனாதிபதியாக வந்தவுடன் நேரில் சந்தித்து அரசியல் கைதிகளை விடுதலை செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

இதன்போது 6 மாத காலத்திற்குள் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதியளித்திருந்தார். ஆனால், மதகுருவிற்குக் கொடுத்த வாக்கைக்கூட இதுவரை ஜனாதிபதி மைத்திரிபால நிறைவேற்றவில்லை. அதேபோன்று சிறையில்  வாடும் அரசியல் கைதிகள் தங்களின் கையெழுத்திட்டு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஊடாக ஜனாதிபதியிடம் விடுதலை செய்யுமாறு கேட்டிருந்தனர்.

01.10.2015 அன்று சிறுவர் தினத்தை சந்தோஷமாகக் கொண்டாட முடியாத அரசியல் கைதிகளின் பிள்ளைகள் ஊர்வலமாகச் சென்று வடக்கு மாகாணசபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஊடாக ஐனாதிபதிக்கு தங்களின் தந்தையர்களை விடுதலை செய்யும்படி மகஜர் அனுப்பி கேட்டுக்கொண்டார்கள். இப்படியான பல முயற்சிகள் செய்தும் பலன் அளிக்கவில்லை. அப்படியிருந்தும் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது நம்பிக்கை வைத்து தங்கள் விடுதலையை வலியுறுத்தி அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கின்றனர்.

போர் முடிவடைந்த அந்தக் காலப்பகுதியில் 14 ஆயிரம் போராளிகளுக்கு விடுதலைக்கு வழிவகுத்து கொடுத்தது போன்று இப்போது சிறைகளிலே வாடிக்கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கருத்து. அதேபோன்றுதான் சர்வதேச முக்கிய பிரதிநிதிகளும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால் இப்படியான கருத்துக்களுக்கு கூட மதிப்பளிக்காமல் நல்லாட்சி நடப்பதாக தெரிவிக்கும் ஆட்சியாளர்களின் கருத்துக்கள் ஏற்றதாக தெரியவில்லை. மீண்டும் மீண்டும் தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத ஆட்சியாளர்களாகவே இருக்கின்றார்கள். தமிழ் அரசியல் கைதிகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்களையே ஏமாற்றும் ஒரு வாடிக்கையாகவே கொண்டுள்ளார்கள்” என்றுள்ளது.

Comments
Loading...