Designed by Iniyas LTD
ஈழத்தமிழர் மீதெறிந்த நஞ்சுக் குண்டுகளுக்கு கணக்கில்லையா?
அண்மையில் ஸ்ரீலங்காவின் தெற்கில் கொஸ்கம என்ற பிரதேசத்தில் சாலாவ என்ற இராணுவமுகாமில் ஆயுதக் கிடங்கு வெடித்ததில் அப் பிரதேசத்தின் பெரும் பகுதி அழிந்தது. ஆயுதங்கள் எல்லோரையும் அழிக்கும். அவைகளுக்கு சிங்களவர்களையும் தமிழர்களையும் வித்தியாசம் தெரியாது. தமிழ் ஈழ மக்கள் கடந்த முப்பது வருடங்களாக எத்தனையோ ஆயுதங்களை, வெடிபொருட்களை, குண்டுகளை, துப்பாக்கிளை முகம் கொண்டார்கள். அப்படியிருக்கையில் ஒரு சிங்கள இராணுவத்தினன் கொல்லப்பட்ட சாலாவ இராணுவ முகாம் வெடி விபத்து ஒன்றும் பெரிய விடயமே இல்லை என்பதே உண்மை
ஆனால் இப்போது ஸ்ரீலங்கா அரசும் சரி, ஸ்ரீலங்கா அரசின் எதிர்தரப்பாளர்களான ராஜபக்ச போன்றவர்களும் சரி, ஆயுத கிடங்கு வெடிப்பால் தம் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அக்கறைப்படுகின்றனர். ஸ்ரீலங்காத அரசோ, ஆயுதக் கிடங்கு வெடித்த பகுதியில் காற்று சுவாசிக்க முடியாது என்கிறது. தண்ணீரை அருந்த வேண்டாம் என்கிறது. அதற்காக பெரும் ஆராய்ச்சி எல்லாம் நடத்துகிறது. சுவாய நோய்களும் தோல் நோய்களும் வரலாம் என்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல நிவாரணங்கள் உண்டென அறிவிக்கிறது.
அதைப்போல ஸ்ரீலங்கா அரசின் எதிர்தரப்பாளர்களான மகிந்த ராஜபக்ச தரப்பினர் ஆயயுத கிடங்கை பாதுகாப்பான பிரதேசத்திற்கு மாற்றவில்லை என்று கவலைப்படுகிறது. ஆனால் ஸ்ரீலங்கா அரசோ, மகிந்த ராஜபக்சவே ஆயுத கிடங்கு வெடி விபத்துக்கு காரணம் என்கிறது. ஏனெனில் மகிந்த ராஜபக்ச தன்னுடைய ஆட்சிக்காலத்தில் ஆயுத கிடங்கை பாதுகாக்கும் வகையில் உரிய இடத்தில் களஞ்சியப்படுத்தவில்லை என்றும் ஸ்ரீலங்கா கல்வி அமைச்சர் சொல்கிறார்.
இப்படி சிங்கள ஆளும் தரப்பும் எதிர் தரப்பும் அடிபட்டுக்கொண்டிருக்கும் சமயத்தில் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள்மீது எறியப்பட்ட குண்டுகள் தொடர்பிலும் அது தொடர்பில் ஸ்ரீலங்காவின் அன்றைய அரசு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பிலும் ஸ்ரீலங்காவின் இன்றைய அரசு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பிலும் கருத்துக்கள் பகிரப்படுகின்றன.
முக்கியமாக ஸ்ரீலங்காவின் இன்றைய பிரதமர் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் அல்லது இறுதி யுத்தத்தில் வீசப்பட்ட குண்டுகளில் இராசயன பாதிப்பு ஏற்படவில்வில்லை என்று கூறியுள்ளார். அதாவது நஞ்சு குண்டுகளை வீசவில்லை என்று ரணில் கூறுகிறார். இங்குதான் மகிந்த ராஜபக்சவையும் கோத்தபாய ராஜபக்சவையும் காப்பாற்றும் வழமையான ஸ்ரீலங்கா பிரதமர் என்று ரணில் தென்படக்கூடும்.
ஆனால், ஈழ இனப்படுகொலை இறுதி யுத்தத்தின்போது தமிழ் ஈழ மக்கள்மீது தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும் நஞ்சுக் குண்டுகளையும் ஸ்ரீலங்கா அரசு பாவித்தது என்பது உலகறிந்த உண்மை. தமிழ் இனப்படுகொலைக்காக அவை எல்லாவற்றையும் ஸ்ரீலங்கா அரசு செய்யும் திறந்த இனப்படுகொலை மளநிலையில் இருந்தது என்பது இரகசியமானதல்ல. கொத்துக் குண்டுகளாலும் நஞ்சுக் குண்டுகளாலும் பாதிக்கப்பட்ட பலர் இன்றும் தமிழ் ஈழத்தில் வாழ்ந்து கொண்டும் இறந்து கொண்டும் இருப்பதைக் காண்கிறோம்.
இதில் இரண்டு விடயங்கள் தெளிவாகத் தென்படுகின்றன. ஸ்ரீலங்காவின் முன்னைய அரசு தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தியும் தடை செய்யப்பட்ட குண்டுகளைப் பயன்படுத்தியும் நஞ்சுக் குண்டுகளைப் பயன்படுத்தியும் தமிழ் ஈழ மக்களை இனப்படுகொலை செய்தமையை இன்றைய ஸ்ரீலங்கா மறைக்கிறது. அத்துடன் சிறுகுண்டு வெத்தாலும் அது சிங்கள மக்களுக்கு பாதிப்பு என்றும் அதைக்காட்டிலும் பல லட்சம் மடங்கு குண்டு ஈழத்தில் வெடித்தாலும் அதில் பாதிப்பு எதுவுதுமில்லை என்றும் கூறுவதன் மூலம் தன்னை யாருடைய அரசென்றும் ஸ்ரீலங்கா அரசு வெளிப்படுத்துகிறது.
தமிழ் ஈழ மக்களை இனப்படுகொலை செய்யும் ஒரு அரசு, தமிழ் ஈழ மக்கள்மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையிலிருந்து இனப்படுகொலையாளிகளைக் காப்பாற்றும் ஸ்ரீலங்கா அரசு சிங்கள மக்களை ஒருமாதிரியும் தமிழ் ஈழ மக்களை ஒரு மாதிரியும் நடத்தி நாம் உங்கள் அரசில்லை என்றும் நீங்கள் எமது மக்கள் இல்லை என்றும் நீங்கள் இன அழிப்பு செய்யப்படவேண்டியவர்கள் என்றும் மீண்டும் மீண்டும் உணர்த்துகிறது.
ஸ்ரீலங்காவில் குண்டுகள் வெடித்தாலே நஞ்சு காற்றில் கலந்துவிட்டதா? தண்ணீரில் நஞ்சு கலந்துவிட்டதா? என்று ஆராய்வார்கள். ஆனால் முள்ளிவாய்க்காலில் கொத்துக்கொத்ததாக நஞ்சுக் குண்டுகள் வீசினாலும் அதனால் ஒரு பாதிப்பும் இல்லை என்றும் தமிழ் ஈழத்தில் இன்று மக்கள் அழிவதற்கும் அதற்கும் எந்தத் தொடர்புமில்லை என்றும் சொல்வார்கள். அதாவது, தமிழீழர்கள்மீது எறிந்த நஞ்சுக் குண்டுகளுக்கு மாத்திரம் ஸ்ரீலங்கா அரசிடம் கணக்கில்லை என்பது புலனாகிறது.
தமிழ் ஈழ மக்கள் தம்மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி வேண்டியிருக்கும் காலத்தில் ஸ்ரீலங்கா அரசு தமிழ் ஈழ மக்களுக்கு நடந்த மிகப்பெரும் மனித உரிமை மீறலை மானுடப்படுகொலையை மறைப்பதன் மூலம் தன்னை ஒரு கொடிய இனப்படுகொலை அரசாக நிரூபிக்கிறது. இதனையே ஸ்ரீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் “நஞ்சுக் குண்டுகளால் தமிழ் ஈழர்களுக்கு ஒரு பாதிப்பும் இல்லை” என்ற பேச்சும் நிரூபணமாக்குகிறது.
தமிழவன்,
செண்பகம்.
10.06.2016
