Designed by Iniyas LTD
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களிற்கு இராணுவ புலனாய்வுத்துறை எச்சரிக்கை…
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு “மீளுருவாக்கப்படும் புலிகளால்“ உயிராபத்து உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இராணுவப் புலனாய்வு பிரிவினரால் இந்த இரகசிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராசா, சி.சிறிதரன், த.சித்தார்த்தன் ஆகிய நால்வருக்குமே இவ்வாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் ஒட்டுசுட்டானில் கிளைமோருடன் சிலர் கைதாகி, அவர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது..
“யாழிலும், கிளிநொச்சியிலும் குழப்பங்களை ஏற்படுத்த புலம்பெயர்ந்துள்ள தமிழர்களின் ஒரு அணி முயற்சிப்பதாகவும், அவர்களால் குறித்த நால்வரிற்கும் ஆபத்து ஏற்படலாம் என இராணுவப் புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது.
அத்துடன், அவர்களின் பாதுகாப்பு கடமையில் உள்ள பொலிசாருடனும் கலந்துரையாடல்களை நடத்தி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த சில அறிவுறுத்தல்களை இராணுவப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விடுத்துள்ளனர்.
குறித்த உறுப்பினர்களின் பொதுநிகழ்வுகளில், இராணுவப் புலனாய்வுத்துறையின் பாதுகாப்பு தேவையானால் அவர்கள் பெற்றுக்கொள்ளலாமென்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, ஒட்டுசுட்டான் கிளைமோர் சம்பவத்தில் கைதான எட்டுப்பேரும் தற்போது பயங்கரவாத தடுப்பு பிரிவின் விசாரணைகள் முடிவடைந்து பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களிற்கு கிரமமாக வெளிநாட்டிலிருந்து பணம் வந்ததையும், இறுதியாக ஒருவரின் வங்கிகணக்கிற்கு 15 இலட்சம் ரூபா வந்ததையும் பொலிசார் கண்டறிந்துள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவின் மூத்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
