தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தருமபுரி இளவரசனின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி

தருமபுரி இளவரசனின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி கோரி அவரது தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது கோரிக்கையை பரிசீலனை செய்து அனுமதி வழங்குமாறு தருமபுரி மாவட்ட வருவாய் கோட்ட அதிகாரிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தருமபுரி மாவட்டம் நத்தம் காலனியைச் சேர்ந்த டி.இளங்கோ உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:maxresdefault

காதல் விவகாரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி எனது மகன் இளவரசன் மர்மமான முறையில் உயிரிழந்தார். போலீஸ் தரப்பில் அது தற்கொலை என வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனது மகன் இறந்து ஜூலை 4-ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது.

இளவரசனின் நினைவு தினத்தில் அவனுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு எனது குடும்பத்தினர், அவனது நண்பர்கள், கிராம மக்கள் உள்பட பலர் விருப்பம் தெரிவித்தனர். இது தொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர், போலீஸ் எஸ்.பி., ஆர்டிஓ ஆகியோரிடம் விண்ணப்பித்தோம். ஆனால், அவர்கள் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி வழங்க மறுத்து விட்டனர்.

எனவே, எனது மகனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த மனு நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை ஆர்டிஓ பரிசீலனை செய்து அனுமதிக்க வேண்டும்.

அதில், மனுதாரர், அவரது குடும்ப உறுப்பினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நல விரும்பிகள் ஆகியோரில் 50 பேரை ஜூலை 4-ஆம் தேதி மால 3 முதல் 4 மணி வரை அனுமதிக்க வேண்டும். மேலும், கிராம மக்களையும் ஆர்டிஓ அனுமதிக்கலாம். அவர்களும் 50 பேர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அவர்கள் ஒரே வரிசையாக மட்டும் செல்ல வேண்டும். அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

Comments
Loading...